இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மூவர்ண பலூன்கள் விண்ணில் பறக்கவிடப்பட்டு, தேசிய கீதம் இசைத்து குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் இனிதே நிறைவு பெற்றன. இதேவேளை ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். இதனை நிறுத்துவதற்காக அரசு தரப்பு எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன.
11 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் யாவும் தோல்வியடைந்த நிலையில், போராட்டத்தின் 62வது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வந்தபோது, அனுமதி வழங்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார். இதனால் அப்பகுதியெங்கும் போர்களம்போல் காட்சி தந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தடைகளை உடைத்து முன்னேறி டெல்லிச் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் தற்போது அங்கிருந்து போராட்டம் நடத்துவதாகவும், விவசாயிகள் செங்கோடையில் தமது கொடியினை ஏற்றியுள்ளதாகவும் தெரிய வருகிறது.