இந்திய நிலப்பரப்புகளை சீனாவுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டார் பிரதமர் மோடி. அவர் இதற்கு நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும் எனப் பகிரங்கக் குற்றம் சாட்டியுள்ளார் ராகுல் காந்தி.
கிழக்கு லடாக்கில் உள்ள சூழல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்தார். அப்போது நமக்கு சொந்தமான பிங்கர் 4 பகுதியிலிருந்து பிங்கர் 3 பகுதிக்கு நமது வீரர்கள் வந்திருப்பது தெரிய வருகிறது. நமக்கு சொந்தமான இடத்திலிருந்து வீரர்கள் நகர்ந்தது ஏன்? நமது நிலத்தினை சீனாவுக்கு பிரதமர் மோடி விட்டுக்கொடுத்தது ஏன்? நமது தேசத்துக்கு சொந்தமான இடங்களை பாதுகாக்க வேண்டியது பிரதமரின் பொறுப்பல்லவா? எனக் கேள்வி எழுப்பினார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி.
புதுடெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது அவர் கூறுகையில், நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முக்கியமான பகுதிகள் குறித்து நேற்று ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பிரதமர் நமது ராணுவத்தின் தியாகத்திற்கு துரோகம் செய்கிறார். இந்தியாவில் இதை செய்ய யாரும் அனுமதிக்கக்கூடாது. சீனாவை எதிர்க்க பிரதமர் மோடி பயப்படுகிறார், சீனாவுக்கு பணிந்து செல்கிறார் எனவும் குற்றம் சாட்டினார்.