இந்தியா

‘யானைக்கு வெட்டிய குழியில் அதை வீழ்த்த சிற்றெறும்பு போதுமா?’என்றுதான் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் 40 வயதைக் கூட எட்டாத சம்பத்குமாரை திமுக வேட்பாளராக அறிமுகப்படுத்தியபோது தமிழ்நாடு முழுவதும் கழக உடன்பிறப்புகள் மத்தியில் எழுந்த கேள்வி.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி நான்கரை ஆண்டுகள், மிகச் சாமார்த்தியமாக ஆட்சி செய்தார். டெல்லியிருந்து பாஜக பொம்மையாக ஆட்டி வைத்தபோதிலும் சக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கோடிகளை கொள்ளையடித்து சுருட்டியபோதும் அனைத்தையும் மூடி மறைத்து காத்தவர் என்று எதிர்கட்சிகளால் வசைபாடப்பட்டுவரும் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான எட்டப்பாடி கே பழனிச்சாமி.

அவரை எதிர்க்க ஒரு புதுமுகமா? என்று எடப்பாடி செய்தியாளர்களிடம் விசாரித்தால், ‘திமுக வேட்பாளர் சம்பத்குமாரை பொடிப்பையன் என்று நினைத்துவிடாதீர்கள். அவரைப் பின்னால் இருந்து இயக்குபவர், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் செல்வகணபதி’ என்கிறார்கள். அவரின் பரிந்துரையில்தான் சம்பத்குமாருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாம் திமுக தலைமை. எனவே, இதை செல்வகணபதிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான போட்டி என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, எடப்படிக்கும் சம்பத்குமாருக்குமான போட்டியாகப் பார்க்கக் கூடாது என்கிறார்கள். ஏனென்றால் செல்வகணபதி அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் சேர்ந்தவர். அ.தி.மு.க-வில் இருந்தபோது எடப்பாடிக்கே சீனியர் செல்வகணபதி. அந்த வகையில் எடப்பாடியின் பலகீனங்களைச் செல்வகணபதி நன்றாக அறிந்தவர். அவரால்தான் இங்கு போட்டி கடுமையாகி இருக்கிறது என்று உண்மையை உடைத்துப் பேசுகிறார்கள்.

சம்பத்குமார் சிறுவயது முதலே கட்சியில் இருப்பவர். அவரது குடும்பத்தினர் திமுகவினர். அவர் திமுக மாணவரணியில் பெயர் சொல்லும்படியாக வளர்ந்திருக்கிறார். படிப்பிலும் கெட்டிக்காரர். எம்.சி.ஏ பட்டதாரியான 37 வயது சம்பத்குமார், தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் அத்தப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 2003-ல் மாணவரணியில் கவனம் பெற்ற சம்பத்குமார் அடுத்து வந்த இரண்டே ஆண்டுகளில் 2015 முதல் சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார்.

சம்பத்குமார் தீவிரமாகக் கட்சிப் பணி செய்யக்கூடியவர். கொரோனா காலகட்டத்தில் வீடு வீடாகச் சென்று கட்சி பேதம் பாராமல் மக்களுக்குப் பல உதவிகளைச் செய்திருக்கிறார். அது அவருக்கு வாக்குகளைப் பெற்றுத்தரும் என்றும் தொகுதியின் நடுநிலை வாக்காளர்களின் ஓட்டு அவருக்குத்தான் என்கிறார்கள் தி.மு.க-வினர். ஆனால், சம்பத்குமாரை தொகுதி மக்களுக்குப் பெரிதாகத் தெரியாது. அதிமுகவினர் இவர்மீது கிளப்பும் பண மோசடிச் சர்ச்சைகள் அவருக்கு பலகீனமாகவே இருக்கிறது என்கிற அதிமுக தரப்பு.

இதுவொருபுறம் இருக்க எடப்பாடி தொகுதியில் ஏற்கெனவே நான்கு முறை வெற்றிபெற்றிருக்கிறார் பழனிசாமி. இந்தமுறை முதல்வர் வேட்பாளர் அந்தஸ்து, பணபலம், பாட்டாளி மக்கள் கட்சியுடனான கூட்டணி பலம், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு ஆகியவற்றைத் தனக்கான ஆயுதங்களாகக் கொண்டு தொகுதிக்குள் கம்பீரமாக வலம் வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இத்தனைமுறை எம்.எல்.ஏவாக இருந்தபோதும் தொகுதிக்குள் கட்டப்பஞ்சாயத்து, ரெளடியிசம், தலித்துகள் மீதான தாக்குதல், அவர்களை வன்னியர்கள் தங்களுடைய அம்மன் கோயில்களுக்கு விடாதது போன்றவை எடப்பாடிக்கு மைனாசாக இருந்துவருகின்றன. இதனால் ஒரு தலித் ஓட்டைக்கூட எடப்பாடி பெறமுடியாத நிலை உள்ளது என்கிறார்கள்.

அதேநேரம், சேலத்தை ஒட்டிய எடப்பாடிக்கு சேலம் மாநகராட்சிக்கு இணையாக இணையாக அடிப்படை வசதிகளைச் செய்து தந்திருப்பது பழனிசாமிக்கு நன்றாக கைகொடுக்கிறது. பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு கூட்டம் வருகிறது. ஆனால், அரசு ஒப்பந்தப் பணிகளில் முதல்வரின் சாதியினரே ஆதிக்கம் செலுத்திவருவதால், பிற சமூகத்தினரின் அதிருப்தி நிலவுகிறது. சாதிக்காரர்களுக்குக் காட்டும் இந்த அதிகாரத் துஷ்பிரயோகச் சலுகை, உள்ளிட்ட ஒப்பந்த ஊழல்கள், ஒருகால் அதிமுக தோற்றால் எடப்பாடிக்கு பெரும் தலைவலியாக மாறும் என்பதால், பணத்தை தொகுதியில் தண்ணீராக வாறியிரைத்து வருவது மட்டுமல்லாமல், தேர்தல் அறிவிப்புக்கு 8 மாதங்களுக்கு முன்பே தொகுதியில் உள்ள ஒவ்வொரு அதிமுக உறுப்பினர் குடும்பத்துக்கும் 15 ஆயிரம் ரொக்கமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி கோரோனா ஊரடங்கு இருந்த ஏப்ரல் மாத இறுதியில் கொடுக்கப்பட்டதாகவும், திமுக குடும்பங்களும் தங்களுக்கும் அந்தப் பணப்பரிசு வேண்டும் என்று கேட்டதில் பின்னர் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டதாகவும் இதை திமுக பெரிதுபடுத்தவில்லை என்றும் கூறுகிறார்கள்.

இதுவொருபக்கம் இருக்க பழனிசாமியின் மைத்துனரான வெங்கடேஷ் என்பவரும் அதிமுக கட்சியின் தொகுதிப் பொறுப்பாளர் செல்லதுரை என்பவரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளை மதிப்பதில்லை என்று கட்சியினரே குமுறுகிறார்கள். மேலும், எடப்பாடி பகுதியில் நாகரிகமான அரசியல் செய்துவந்த அதிமுகக் கட்சியின் நகரச் செயலாளர் ராமன், ஒன்றியச் செயலாளர் மாதேஸ்வரன், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் எமரால்ட் வெங்கடாசலம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஒரு புடவை ரூபாய் 5 ஆயிரம் மதிப்புள்ள ஒன்றரை லட்சம் புடவைகளை ஆரணியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆர்டர் கொடுத்து, அதை 1 வருடத்துக்கு முன்பே தொகுதிக்குள் கொண்டுவந்து மறைத்து வைத்து தற்போது அந்தப் புடவைகளையும் வெற்றிகரமாக விநியோகித்து முடித்திருக்கிறாராம் பழனிச்சாசி. இத்தனை இலவசங்களைப் பெற்றவர்கள் எடப்பாடிப் பழனிச்சாமியையே தேர்தெடுப்பார்கள். அதிமுக வெற்றிபெறப்போகும் சொற்ப எண்ணிக்கையிலான தொகுதிகளில் எடப்பாடியும் ஒன்றாக இருக்கும் என்கிறார்கள்.

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.