இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சென்ற 5ம் திகதி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
தொற்றுப் பரவல் அதிகமாகவுள்ள 11 மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். இது தொடர்பில் இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, தமிழகத்தில் வரும் 10ம் திகதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்படவும், பெரிய கடைகள் மற்றும் மால்களில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.