இந்தியா
Typography

பாரதீய ஜனதாக் கட்சியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். 

குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் அடுத்த மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால் கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார்.

ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய அக்கட்சியின் ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக பதவி வகிக்கும் வெங்கையா நாயுடு, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். விசாகப்பட்டினத்தில் சட்டப்படிப்பு படித்துள்ளார்.

இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ், அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்புகளில் தீவிரமாக பணியாற்றியுள்ளார். 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகவும் வெங்கையா நாயுடு இருந்துள்ளார். வெங்கையா நாயுடு 2016இல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்