இலங்கை

“போலியான ஒரு தீர்வை நாம் ஒரு போதும் ஏற்கப்போவதில்லை. எமது மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களில் தங்களது அதிகாரங்களைப் பாவிக்கக்கூடிய ஓர் உண்மையான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டினையே நாம் வேண்டி நிற்கின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசேயின் லுங்கை கொழும்பில் நேற்று புதன்கிழமை சந்தித்தார். புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பிலான தற்போதைய நிலைமை குறித்து சிங்கப்பூர் பிரதமரிடம் இரா. சம்பந்தன் தெளிவுபடுத்தினார்.

இந்த நடைமுறைகளை வெற்றிகரமான ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், புதிய அரசியலமைப்புத் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்படும் பிழையான, தேவையற்ற அச்சங்களை நீக்குமுகமாக ஜனாதிபதியும் பிரதமரும் சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்புத் தொடர்பில் தெளிவூட்டல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தற்போது மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானதல்ல என்பதையும் இரா. சம்பந்தன் சிங்கப்பூர் பிரதமருக்கு எடுத்துக் கூறினார்.

வடக்குக், கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒருமித்த, பிரிக்க முடியாத, பிரிவுபடாத நாட்டிற்குள் தீர்வொன்றை விரும்புகிறார்கள். ஆகவே, புதிய அரசியல் யாப்பானது தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற ஒன்றாக அமைய வேண்டுமெனவும் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.

போலியான ஒரு தீர்வை நாம் எப்போதும் ஏற்கப் போவதில்லை எனவும் மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களில் தங்களது அதிகாரங்களைப் பாவிக்கக்கூடிய ஓர் உண்மையான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டினையே நாம் வேண்டி நிற்கிறோம் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருக்க முடியாதெனவும், இந்த வருடத்திற்குள் புதிய அரசியல் யாப்பு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். இந்நாடானது கடந்த காலங்களில் துர்அதிஷ்டவசமாக பிழையான பாதையில் பயணித்துள்ளது. அந்நிலைமைகளைச் சரிசெய்வதற்கு இதுவொரு நல்ல தருணம் எனவும் இரா.சம்பந்தன் எடுத்துக் கூறினார்.

இரா.சம்பந்தன் இலங்கையில் விசேடமாக வடக்குக் கிழக்கில் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள், முதலீடுகள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டுமென சிங்கப்பூர் பிரதமரிடம் வேண்டிக்கொண்டார். வடக்குக் கிழக்கில் உள்ள இளைஞர்கள் அர்ப்பணிப்புள்ள, கடின உழைப்பாளிகள். ஆனால், துர்அதிஷ்டவசமாக யுத்தத்தின் நிமித்தம் அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களும் திறன் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார். சிங்கப்பூர் அரசும் மக்களும் எமது இளைஞர்களின் திறன்களையும் அறிவையும் விருத்தி செய்வதும் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதுமான முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.

வடக்குக் கிழக்கில் காணப்படும் பெருமளவிலான வாய்ப்புக்களைச் சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன் விசேடமாக, இயற்கைத் துறைமுகம் ஒன்றையும் மேலும் பல வளங்களையும் கொண்ட திருகோணமலையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் சிங்கப்பூர் கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டதோடு, இந்த நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் இம் முதலீடுகள் ஒரு பலமாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினார்.

வடக்குக் கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளும்படியான இரா. சம்பந்தனின் கோரிக்கை குறித்து தான் சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடுவேன் என உறுதி வழங்கிய சிங்கப்பூர் பிரதமர் தனது அடுத்த விஜயத்தின்போது நிச்சயம் திருகோணமலைக்கு விஜயம் செய்வேன் எனவும் தெரிவித்தார். மேலும், சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இலங்கைத் தமிழ் மக்கள் ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் எதிர்காலத்தில் இரா. சம்பந்தன் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வேண்டுமெனத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.