இலங்கை
Typography

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கும் போது மது மற்றும் புகைத்தல் பழக்கத்திற்கு உட்படாதவர்கள், அரச புனர்வாழ்வின் பின்னர் எவ்வாறு தொடர்ச்சியாக புற்றுநோயினால் உயிரிழந்து வருகின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.  

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 12,000 முன்னாள் விடுதலைப் புலி போராளிகளில் 107 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் பெரும்பாலோனோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டே உயிரிழந்துள்ளனர். மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்கத்திற்கு கடுமையான கட்டுப்பாடு விதித்திருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தொற்றாநோயான புற்றுநோய்க்கு எவ்வாறு ஆளானார்கள் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிவசக்தி ஆனந்தன் மேற்கண்ட கேள்விகளைத் தொடுத்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “முன்னாள் போராளிகளின் மரணம் தொடர்பாக சர்வதேச மருத்துவ நிபுணத்துவத்துடனான விசாரணை அவசியம். இதற்கு முன்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தற்போது சமுகத்தில் உள்ள பல முன்னாள் போராளிகள் வெவ்வேறு நோய்களுக்குள்ளாகின்றனர். இவை எவ்வகையான நோய்கள் என்று இனங்காணப்படவில்லை. எனவே அனைத்து முன்னாள் போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அரசாங்கம் தொடர்ந்தும் காலம் தாழ்த்தாது இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

அது மாத்திரமன்றி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு கூட ஊசிகள் ஏற்றப்பட்டதால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையிலும் அரசியல் கைதியொருவர் தடுப்பூசி ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். அவர் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ளவேண்டும். 

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்ந்தும் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகக்குறைந்தது அவர்களின் வழக்குகளை தமிழ்ப் பகுதிகளுக்கு மாற்றவேண்டுமென கைதிகள் என்னிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி நடடிவக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்