இலங்கை

“யாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது எமது கட்சி முதன்மை வேட்பாளரான விஸ்வலிங்கம் மணிவண்ணன் மேயராக நிறுத்துவோம்.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ். மாநகர சபையில் ஆட்சி அமைக்கும் போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் அதிக உறுப்பினர்கள் மணிவண்ணனை தெரிவு செய்வார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களில் கணிசமானவர்கள் மணிவண்ணணை மேயராக தெரிவதற்கு வாக்களிப்பார்கள். இதில் சந்தேகம் இல்லை.

இந்த இரகசிய வாக்கெடுப்பில் வேறு யாரும் கூடுதலான வாக்குகளை பெற்று பெரும்பான்மையுடன் மேயராக தெரிவுசெய்யப்பட்டால் அவர் நிர்வாகத்தை நடத்த முடியும். அவ்விடயத்தில் நாங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வோம். நாங்கள் விரும்பாத பகுதியைச் சேர்ந்தவர் நிர்வாகத்தை அமைத்தால் நாங்கள் குழப்பத்தை ஏற்படுத்தப் போவதில்லை.

ஆனால், அந்த சபையில் மக்களுடைய நலனுக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அந்த விடயத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். அதற்கு தயங்க மாட்டோம்.

இரகசிய வாக்களிப்பு தொடர்பில், அல்லது ஆட்சி அமைப்பது தொடர்பில் நாங்கள் வேறு எந்த கட்சியுடனும் பேசவில்லை. அப்படியான பேச்சுக்களை நடத்தப் போவதும் இல்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் எம்முடன் இது தொடர்பில் பேசியுள்ளார்கள். எமது வேட்பாளருக்கு ஆதரவு தர விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

வேறு கட்சிகளின் தனி நபர்களும் எங்களுடன் பேசியுள்ளார்கள். இதனடிப்படையிலேயே ஆட்சியமைப்பது தொடர்பில் நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். உள்ளூராட்சி சபைகளில் தலைமை வகிக்கும் நபர்கள் யார் என்பது முக்கியம் இல்லை.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ். மாநகர முதன்மை வேட்பாளர் இமானுவேல் ஆர்னோல்ட் பல இடங்களில் மதவாதத்தை கையில் எடுத்து, தான் ஒரு கிறிஸ்தவர் என்றதால் தமிழ்த் தேசியப் பேரவை தன்னை எதிர்ப்பதாக வழமை போன்று அப்பட்டமான பொய்யை சொல்லி வருகின்றார். இதே போன்று நல்லூர் பிரதேச சபை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகள் உட்பட குறைந்த பட்சம் ஐந்து சபைகளில் தமிழ்த் தேசியப் பேரவை ஆட்சியமைக்கும்" என்றார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.