இலங்கை
Typography

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள பொது மக்களுடைய காணியில் ஒரு துண்டு காணியை கூட கடற்படைக்கு வழங்க முடியாது என்று மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனால் கொண்டுவரப்பட்ட தீர்மானமே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியில், கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ளது. குறித்த காணியை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் முயற்சிகள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையும் காணி சுவீகரிப்புக்கான காணி அளவீட்டு முயற்சி காணி நில அளவை திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்படவிருந்தது. எனினும், காணி சுவீகரிப்பை கைவிடுமாறு கோரி காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், காணி அளவையைக் கைவிடுவதாகவும், முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடப்படும் எனவும் எழுத்து மூலமாக தெரிவித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நில அளவை கைவிடப்படுவதாகவும், எதிர்வரும் 26ஆம் திகதி (இன்று) இடம்பெறவுள்ள முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவித்து, கரைத்துறைப்பற்று பிரதேச செயலரின் கையொப்பத்துடனான கடிதத்தை மேலதிக அரசாங்க அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கையளித்தார்.

இதனையடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டிருந்தனர். இந்நிலையில், இன்று (26) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் ஆராயப்பட்டு, குறித்த காணிகளை கடற்படைக்கு வழங்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS