இலங்கை
Typography

இறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு, புனர்வாழ்வு முகாம்களில் வைத்து விச ஊசி செலுத்தப்பட்டமை மற்றும் உணவில் நஞ்சு கலக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் உறுதியானால் அவை இனப்படுகொலைக் குற்றங்களில் சேர்க்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

புனர்வாழ்வு பெற்று விடுதலையாகியுள்ள 12000 முன்னாள் போராளிகள் இருக்கின்றார்கள். அவர்களில், 107 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதில், அதிகமானோர் புற்றுநோயினாலேயே உயிரிழந்துள்ளனர். அத்தோடு, முன்னாள் போராளியொருவர் புனர்வாழ்வு முகாம்களில் தமக்கு விச ஊசி செலுத்தப்பட்டதாக அண்மையில் தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் மேற்கண்ட விடயத்தினைக் கூறியுள்ளார்.

அவர்  மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் போராளிகளுக்கு எதிரான இவ்வாறான நாசவேலை திட்டமிடப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அவர்களை அதிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியை எங்களுடைய வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் மேற்கொள்வதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். 

இதனால், பாதிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், முதலமைச்சர் அலுவலகத்தில் தங்களுடைய பெயர் விபரங்களைப் பதிவு செய்ய வேண்டுமென்ற ஊடக அறிக்கை விரைவில் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும்.  அதனைத் தொடர்ந்து தமது விபரங்களை அனைவரும் தவறாது பதிவு செய்ய முன்வர வேண்டும். 

தேவைப்பட்டால் மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் வெளிநாட்டு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டுமெனில் அதற்குப் பெருமளவு பணம் தேவைப்படும்.  இதற்கான பணத்தைத் தொண்டர் அமைப்புக்கள் மற்றும் ஐ.நா அமைப்புக்களிடம் பெற்றாவது அவசியம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை விடுத்து ஒவ்வொருவரும் தங்களின் சொந்தச் செலவில் மருத்துவப் பரிசோதனை செய்கின்ற நிலை உருவானால் பாதிக்கப்பட்டவர்களுடைய ஒட்டு மொத்த தரவுகளையும் நாம் திரட்ட முடியாத நிலை ஏற்படும். 

ஆகவே, விசேட மருத்துவப் பரிசோதனைகள் அவசியம் தேவை எனக் கருதும் நிலை உருவானால் அவர்களுடைய இரத்த மாதிரிகள், உடலிலேயுள்ள செல்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு, உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவை யாவும் அனுப்பப்பட்டு இது தொடர்பான இறுதி முடிவை நாங்கள் பெறுவோம்.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்