இலங்கை
Typography

இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை புரிய வேண்டும் என நினைத்தால், புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கு மாகாணத்தில் முதலிட முன்வர வேண்டும் என்று சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். 

சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் யாழ். மாவட்டத்தில் விருந்தோம்பல் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே ஜோன் அமரதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்களால் வழங்கப்பட்ட 5 வருட ஆணையை நிறைவேற்ற நல்லாட்சி அரசு முனைந்து வருகின்றது. எனினும் தற்போது, குழப்பமில்லாது இந்த அரசை கொண்டு செல்லவே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். அதாவது இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை புரிய வேண்டும் என நினைத்தால் வடக்கில் முதலிடுங்கள். குறிப்பாக சுற்றுலாத்துறையில் முதலிட முன்வாருங்கள்.

வடக்கில் இயற்கை வளம் நிறைந்த இடங்கள் பல காணப்படுகின்றன. எனவே புலம்பெயர்ந்த மக்கள் முதலிடுவதன் மூலம் வடக்கில் உள்ள வேலைவாய்ப்பற்ற பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS