இலங்கை

இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில சம்பவங்கள் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தென்னகும்பர மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முயன்றவர்களை போலிஸார் கலைத்திருக்கிறார்கள். துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை கண்டி மாவட்டத்துக்கு வெளியே பூகொடை என்ற இடத்தில் முஸ்லிம்களின் சில கடைகள் எரிந்ததாக கூறப்படுகின்ற போதிலும் அது விபத்தா அல்லது வன்செயலா என்று இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

கண்டி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து மூடிய நிலையிலேயே இருக்கின்றன.

அதேவேளை புதிய அவசர நிலையின் கீழ் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 20 வருடம் முதல் ஆயுட்சிறை வரை வழங்கப்படலாம் என்று போலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர செய்தி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களும் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் கண்டனம்

இதற்கிடையே அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை பல அரசியல் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

உரிமைகளுக்காக ஏங்கிக் கிடக்கும் மக்களை ஒடுக்கவே அரசாங்கம் அவசரநிலையை கொண்டுவந்ததாக ஜேவிபி கட்சி கண்டித்துள்ளது. தற்போதுள்ள சட்டங்களைக் கொண்டே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியிருக்க முடியும் என்று அந்தக் கட்சியை சேர்ந்த அநுர குமார திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் போலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம் என்று பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவாக்க கூறியுள்ளார்.


கண்டி மாவட்ட தாக்குதலின் போது உள்ளூரவர்கள் அல்லாமல் வெளியிடங்களில் இருந்து வந்த ஆட்களே முஸ்லிம்களை தாக்கியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். இதனை 'ஒரு அரசியல் சதி' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதனை கண்டித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இது அரசியல் சதி அல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்படாத்தன்மையை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

சுற்றுலாத் துறை

இலங்கையை பொறுத்தவரை மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கண்டி மாவட்டம் ஒரு பிரபல சுற்றுலாத்தலமாகும். இலங்கையின் இரண்டாவது பெரிய நகரும் கண்டியே. புத்தரின் புனித தந்தம் இருக்கும் தலதா மாளிகை உட்பட பல சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அங்கு இருக்கின்றன. இந்தக் கலவரங்களை அடுத்து, அங்கு சுற்றுலாத்துறை குறித்த கவலைகள் எழுந்துள்ளன. ஊரடங்கு சட்டம் காரணமாக அந்தப் பகுதிக்கு பயணிப்பது குறித்த அச்சங்களும் காணப்படுகின்றன.

அவசரநிலைப் பிரகடனம் இலங்கையின் சுற்றுலாத்துறையில் உடனடியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்று நடவடிக்கைகளை தாம் திட்டமிடுவதாகவும் கூறியுள்ளது.

அமெரிக்க மற்றும் பிரிட்டன்

இலங்கையில் ஏற்பட்டுள்ள இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலை அனவருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் தூதுவர் ஜேம்ஸ் டவுரிஸ் கூறியுள்ளார்.

இந்த விசயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ள அமெரிக்கா, அவசர நிலையை முடிந்த விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுள்ளது. அமெரிக்க தூதரக அறிக்கை ஒன்று இவ்வாறு கூறியுள்ளது.

அவசர நிலையின் போது இலங்கையில் உள்ள இந்திய பிரஜைகள் தமது நாட்டு தூதரகத்தை உதவிக்கு அணுக வேண்டும் என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது.

இலங்கை நிலவரங்களை ஆராய ஐநாவின் அரசியல் விவகாரத்துறையைச் சேர்ந்த ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இலங்கை வரவுள்ளதாக ஐ.நா., பேச்சாளர் ஒருவரை ஆதாரங்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக திஹன மற்றும் தெல்தெனிய வன்செயல்கள் குறித்து தீர்மானம் ஒன்று நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு பௌத்தர்கள் இந்த சம்பவங்களுக்காக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்று நாடாளுமன்ற அவைத் தலைவர் லக்‌ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

செய்தி மூலம் - பிபிசி தமிழ் செய்திகள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.