இலங்கை
Typography

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்து அரசாங்கம் போலவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் தமிழர் விரோதப் போக்கில் ஈடுபடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

வடக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் மீள்குடியேற்றச் செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதில், வடக்கு மாகாண சபையோ, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனோ உள்ளடக்கப்படவில்லை. 

குறித்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டி பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வியெழுப்பிய போதே சார்ள்ஸ் நிர்மலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மீள்குடியேற்றச் செயலணியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இடம்பெறவேண்டும் என்பதே எங்களதும், மக்களினதும் விருப்பமாகவுள்ளது. அமைச்சர்களுடன் சம அந்தஸ்துள்ள அதிகாரத்தில் முதலமைச்சர் இடம்பெறவேண்டுமென்பதே எங்களது கோரிக்கை. இல்லாத மீள்குடியேற்றச் செயலணி எவ்வளவு உண்மைத்தன்மையற்றதாக இருக்கும் என்பதை எங்களால் சொல்லமுடியாது.

பிரதமர் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும், இச்செயலணியில் அங்கம்வகிக்கின்ற, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். கடந்த ஆட்சியில், நீதிமன்றத்துக்கு கல்லால் எறிந்து, நீதவானை தொலைபேசியில் மிரட்டியவர், அவருக்கெதிராக நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவில் வழக்குக் கூட இருக்கிறது.

இப்படிப்பட்ட அமைச்சரை இச்செயலணியில் இணைத்திருப்பது தொடர்பில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். யுத்தத்துக்கு முன்னர், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு, அரசியல் பிரதிநிதிகளால் எதிர்ப்பு வெளியிடப்படவில்லை. மத்திய அரசாங்கத்தில் பல அமைச்சுக்கள் உள்ளபோதும், ஏன் செயலணி உருவாக்கப்பட்டது?.

இது, வடக்கு மக்களுக்கு எதிராக செய்யப்பட்டதாகவே நாம் பார்க்கிறோம். நல்லாட்சி என்ற போர்வையில் நீங்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்களெனில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இணைத்துக்கொள்ளவேண்டும். முதலமைச்சர் இல்லாத மீள்குடியேற்ற செயலணியை மக்கள் நம்பப் போவதில்லை. அவரும் இணைந்து செயற்பட்டால் அதில் நல்லிணக்கங்களைக் காணமுடியும். ” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்