இலங்கை

“எம்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நாம் குற்றவாளிகள் என்றால் எமக்குத் தண்டனை வழங்க வேண்டும். நாம் எதற்கும் தயாராகவே உள்ளோம். வீணான திருடன் பழியை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண சபையின் 119வது அமர்வு நேற்று புதன்கிழமை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ப.சத்தியலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட போது நாமாக விரும்பிக் கேட்டு அமைச்சுப் பதவியை பெறவில்லை. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனே எமக்கு அமைச்சுப் பதவியைத் தந்தார். அவர் எமக்குத் தந்த பணியை நாம் மக்களுக்காக சிறப்பாகவே செய்து வந்தோம். எனினும் அரசியல் ரீதியான பழிவாங்கலுக்காகவே அவர் எம்மை நீக்கியுள்ளார்.

அதற்காக நான் எனது பதவியை மீண்டும் கேட்கவில்லை. எம்மை மாற்ற வேண்டுமென்றால் முதல்வர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சரவை மாற்றத்தைச் செய்திருக்கலாம். முதலமைச்சர் அமைத்த ஆணைக்குழுவும் எம்மைக் குற்றவாளிகளாக இனங்காணவில்லை. முதலமைச்சர் விடுத்த கோரிக்கையின் பேரிலேயே நான் அமைச்சுப் பதவியில் இருந்து தானாக விலகினேன்.

விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியாகிய பின்னர் என் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளன என்று முதல்வர் ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்திருந்தார். விசாரணை அறிக்கை வந்த பின்னர் 750 கோவைகளை நான் திருடினேன் என்றும், நோயாளர்களுக்காக கொள்வனவு செய்த உபகரணங்களில் மோசடி செய்தேன் என்றும் என் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் இன்று வரை அது தொடர்பில் எந்த விசாரணையும் நடக்கவில்லை.

முதலமைச்சர் உடனடியாக விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும். அல்லது சபையில் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கட்டும். அதுவும் இயலாது என்றால் வடக்கில் உள்ள பொது அமைப்புளை இணைத்து விசாரணைக் குழு ஒன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எந்த விசாரணையையும் நன் சந்திக்கத் தயாராக இருக்கின்றேன். எனது எதிர் காலம் மற்றும் எனது பிள்ளைகளின் எதிர்காலம் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு விசாரணைக் குழுவை நியமித்து நாம் குற்றவாளி என்றால் எம்மைத் தண்டியுங்கள். அதை விடுத்து பொய்யாக எம்மைத் திருடனாக்காதீர்கள். மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவதற்குள் எம்மைத் தண்டியுங்கள் அல்லது குற்றச்சாட்டில் இருந்து விடுவியுங்கள்.” என்றுள்ளார்.