இலங்கை

மூன்று தசாப்த யுத்தத்தினால் பின்னடைந்துள்ள வடக்கின் கல்வித் துறையை முன்னேற்றுவதற்காக விசேட பத்து வருடத் திட்டமொன்றை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

முன்பு கல்வித்துறையில் கொழும்பு மாவட்டமும் யாழ். மாவட்டமுமே முன்னணியில் திகழ்ந்ததாக குறிப்பிட்ட பிரதமர், யுத்தத்தினால் வடக்கின் கல்வித்துறை பின்னடைவு கண்டுள்ளதாகவும், 1983க்குப் பின் பெருமளவு கல்வியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தொண்டர் மற்றும் ஒப்பந்த அடிப்படை ஆசிரியர்களாக பணிபுரிந்த 324 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு கல்வித் துறையில் நீண்டகாலப் பிரச்சினையொன்று இன்று தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மேலும் தொண்டராசிரியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும். யுத்தம் நிலவிய காலம் பெரும் கஷ்டங்கள், துன்பகரமான காலமாகும். அக்காலத்தில் வடக்கிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியபோது இந்த தொண்டராசிரியர்களே தமது சேவை மூலம் அதனை நிவர்த்தி செய்துள்ளனர்.

அதற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். இவர்களை நிரந்தரமாக்குவதற்கு முறைமையொன்று இருக்கவில்லை. நாம் விசேட செயற்திட்டம் ஒன்றின் மூலம் இவர்களுக்கு நியமனம் வழங்க தீர்மானித்தோம். இடையில் உள்ளூராட்சி சபை தேர்தல் வந்ததால் இவர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் தாமதமேற்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் கல்வியில் சிறந்து விளங்கியது. கொழும்பைப் போன்றே யாழ்ப்பாணமும் கல்வியில் முன்னணியிலிருந்தது. யுத்தத்தினால் அது பின்னடைவு கண்டது. பாடசாலைகள் அழிவுற்று ஆசிரிகள் புலம்பெயர்ந்தமையே அதற்குக் காரணம்.” என்றுள்ளார்.