இலங்கை

'தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறல், நாடு, நகர, கிராம அபிவிருத்தி ஆகிய மூன்று துறைகளிலும் இதுவரையில் அரைக்கிணற்றைக்கூட எமது அரசாங்கம் தாண்டவில்லை என்பது அப்பட்டமான உண்மை.' என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது ஏப்ரல் 04ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ‘தமிழரசு தந்தை செல்வா சத்தியாக்கிரக வழியை தேடி, பின் உள்ளூரில் ஒப்பந்தங்களை செய்து தீர்வை தேடும் வழியை முன்னெடுத்தார். அந்த வழிக்கு பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான், மாமனிதர் அஷ்ரப் ஆகியோரும் ஒவ்வொரு காலகட்டத்தில் வலு சேர்த்தனர். பின் கூட்டணித் தலைவர் அண்ணன் அமிர்தலிங்கம் பாரதத்தின் துணையை பிரதானமாக கொண்டு தீர்வு தேடும் வழியை நாடினார். அதையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் ஆயுத போராட்ட வழியை முன்வைத்து போராடினார். இன்று கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், உலக சமூகத்தை துணைக்கு கொண்டு, ஐநா சபை மூலம் தீர்வு தேடும் வழியை முன்வைத்து அவரால் இயன்றதை செய்து வருகிறார். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான், சகோதர இனங்களுக்கு எமது இன்னல்களை, அபிலாஷைகளை எடுத்து கூறி தீர்வு தேடும் சகவாழ்வு வழியை முன்வைத்து என்னால் இயன்றதை செய்து வருகிறேன். இந்த அனைத்து வழிகளும் தீர்வை காணாவிட்டால், கடவுள் விட்ட வழிதான்.

தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு தேடும் பணி இன்று பாதியில் நிற்கிறது. இதுவரையிலே எமக்கு கிடைத்து இருப்பது, இடைக்கால அறிக்கை என்ற ஒர் ஆவணம் மட்டுமே. இதற்கு முன் எங்கள் முன்னோர் எழுதி வைத்த ஆவணங்களுடன் இதையும் அடுக்கி வைக்க போகிறோமா என நாம் தீர்மானிக்க வேண்டும்.

ஆகவேதான் இரண்டு அசுரர்களில் எந்த அசுரன், அசுரத்தனம் குறைந்தவன் என்று கூட்டிக்கழித்து தேடி, அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகிய இலக்குகளை அடைய புதிய வழிகளை தேடுவது எனது நோக்கம் ஆகியுள்ளது. அந்த வழியை எங்கள் அரசுக்கு உள்ளேயே தேடும் நோக்கில் நாம் இருகின்றோம். பழைய ஆட்சியரை கொண்டு வந்து சிம்மாசனத்தில் அமர செய்ய விரும்பவில்லை.' என்றுள்ளார்