இலங்கை

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சுசில் பிரேமஜயந்த, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் வாக்களித்தனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தே, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நேற்று வெள்ளிக்கிழமை சபாநாயகரிடம் கைளித்திருந்தனர்.

இதனையடுத்தே, அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்றும், எனவே, அதனை மீளப்பெறுமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.