இலங்கை
Typography

நாட்டில் யுத்த காலத்தில் இடம்பெற்ற காணாமற்போனோர் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலமானது நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் முதல் அடியாகக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றலும்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எம்.ஏ.சுமந்திரன் இவற்றைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “காணாமற்போனவர்கள் விடயம் நாடு எதிர்நோக்கியுள்ள பாரதூரமான விடயமாகும். யுத்தகாலத்தின்போது ஆயிரக்கணக்கானவர்கள் காணாமற்போயுள்ளனர். வெள்ளைவான் 'கலாசாரம்' என்பது தற்பொழுது இலங்கையின் சட்ட அகராதியில் ஒரு சொல்லாகப் பதிவாகிவிட்டது. அதிகாரத்தில் இருந்தவர்கள் அந்தளவுக்கு சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளுக்கு இடமளித்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னர் உண்மையை கண்டறிவதற்கு மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காணாமற்போனவர்கள் விடயத்தில் இதனைவிட எதுவும் செய்யப்படவில்லை. நீண்டகாலமாக காணாமற்போனவர்கள் பற்றிய உண்மை கண்டறியப்படவில்லை. 

80களில் இடம்பெற்ற காணாமற்போதல்களுக்கு எதிராக தற்பொழுது இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ள அமைச்சர் மங்கள சமரவீரவும், கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்காரவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜெனீவாவுக்குச் சென்றார்கள். மஹிந்த ராஜக்ஷவே இதில் முன்னுதாரணமாக செயற்பட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாது இது தொடர்பாக எடுத்துச் சென்ற ஆவணங்களை அதிகாரியொருவருக்கு வெளிப்படுத்தவும், வாக்குமூலமளிக்கவும் அவர் அப்போது மறுத்திருந்தார்.

தெற்கில் இளைஞர்கள் காணாமற்போன போதே இவர்கள் சர்வதேசத்திடம் சென்றார்கள். வாசுதேவவும் சிங்கள இளைஞர்கள் காணாமற்போனபோதே ஜெனீவா சென்றுகுரல் எழுப்பினார். சிங்கள இளைஞர்கள் காணாமற்போனால் மட்டுந்தான் அவருக்கு மனித உரிமை மீறலா? அப்போது மட்டும்தான் அவர் மனித உரிமை ஆர்வலரா?

கடந்த காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமற்போயுள்ளனர். அவர்களின் உறவினர்கள் இன்னமும் அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் உண்மை கண்டறியப்பட்டு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS