இலங்கை
Typography

காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலமானது நீதிப் பொறிமுறை அல்ல. இந்த அலுவலகத்துக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் கிடையாது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

காணாமற்போனவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி அவற்றை ஆவணப்படுத்தல், பின்புலம் மற்றும் நடந்தவற்றை ஆராய்தல், காணாமற்போதல்கள் இடம்பெறாதிருப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கல் மற்றும் காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க யோசனைகளை முன்வைத்தல் ஆகிய நான்கு முக்கிய பொறுப்புக்களே இந்த அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற குழு அறையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே மங்கள சமரவீர இவற்றைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 68 வருடங்களாக இழைக்கப்பட்ட பிழைகளைத் திருத்துவதற்கான முதற்படியாக இந்த சட்டமூலம் அமைந்துள்ளது. இது இராணுவத்தினரைக் காட்டிக்கொடுக்கும் சட்டமல்ல. மாறாக யுத்தத்தின் போது காணாமற்போன முப்படையினரைக் கண்டுபிடிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

இந்த சட்டமூலத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் திருத்தங்களை முன்வைத்திருந்தன. இவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. உத்தியோக பூர்வமாக அல்லது உத்தியோக பற்றற்ற வகையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் முகாமொன்றுக்கு எந்த வேளையிலும், எவ்வித முன்னறிவித்தலும் வழங்காமல் சென்று சோதனையிடுவதற்கு இந்த அலுவலகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வைத்த திருத்தத்துக்கு அமைய அவ்வாறான சோதனை நடத்தப்பட்டிருந்தால், 48 மணித்தியாலங்களுக்குள் பொலிஸ்மா அதிபருக்கு அதுபற்றி அறிக்கையிடுவது என மாற்றப்பட்டுள்ளது. இது இந்த அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட விசேட அனுமதி அல்ல. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே இவ்வாறானதொரு அதிகாரம் உள்ளது.

இந்த சட்டமூலமானது அரசியலமைப்புக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டிருப்பதுடன், இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு நீதிமன்றம் செல்வதற்கு போதியளவு காலவகாசம் வழங்கப்பட்டிருந்தபோதும் இன்று (நேற்று வியாழக்கிழமை) சபையில் எதிர்ப்புத் தெரிவித்த குழு அதனைப் பயன்படுத்தவில்லை.

காணாமற் போனவர்கள் தொடர்பில் ஆராயும் அலுவலகத்துக்கு சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் நிபுணத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். சர்வதேச ரீதியில் நிதி உதவிகள் பெறுவதாயின் வெளிநாட்டு வழங்கல் திணைக்களத்தின் ஊடாக அவர்களின் கணக்கிற்குப் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். நிபுணத்துவம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் சர்வதேச நிபுணர்களின் உதவிகள் பெறப்படும். பண்டாரநாயக்கவின் படுகொலை விசாரணை முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிநாட்டவர்களின் உதவிகள் பெறப்பட்டுள்ளன. மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலலேயே அதிகமான வெளிநாட்டவர்களின் உதவிகள் பெறப்பட்டுள்ளன.

கடந்த கால யுத்த சூழலில் காணாமற்போனவர்கள் தொடர்பில் பல்வேறு தரவுகள் கூறப்படுகின்றன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 16,608 பேர் காணாமற் போயிருப்பதாகவும், பலவந்தமாக காணாமற்போகச் செய்தவர்கள் குறித்த ஐக்கிய நாடுகள் நிறுவனம் 12,000 பேர் காணாமற் போயிருப்பதாகவும், பரணகம அறிக்கையின் படி 24,000 பேர் காணாமற் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 உண்மையில் எவ்வளவுபேர் காணாமற் போயுள்ளனர் என்பது தெரியாதுள்ளது. இதனை கண்டுபிடிப்பதற்கு இந்த அலுவலகம் உதவியாக இருக்கும். இறுதி யுத்தத்தின் போது புலி உறுப்பினர்கள் சிலர் இராணுவத்துக்கு அதிக பணம் கொடுத்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அவ்வாறானவர்கள் பற்றிய தகவல்களையும் அறியமுடியும்.

இவ்வாறனதொரு அலுவலகத்தை அமைக்கும் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதானது காணாமற்போனவர்களின் உறவினருக்குச் செய்யும் அவமதிப்பாகும். தெற்கில் காணாமற்போனவர்களுக்காக மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து நான் அமைப்பொன்றை 1980களில் உருவாக்கியிருந்தேன்.

80களில் காணாமற்போனவர்களின் தயார் கூட தமது பிள்ளைகள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர் என நம்பியிருக்கின்றார்கள். இதுபோல வடக்கிலும் பல தாய்மார், மனைவிமார், பிள்ளைகள் என பலரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அவர்களுக்கு பதிலொன்றை வழங்குவதற்கான அலுவலகமாக இது இருக்கும்.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS