இலங்கை
Typography

கிளிநொச்சி இரணைமடுக்குளத்துக்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை அம்மன் ஆலய வளவுக்குள், புத்தர் சிலை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. 

இராணுவத்தினரின் இவ்வாறான நடவடிக்கைகள் கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களையும் சிங்கள மயப்படுத்தும் திட்டங்களின் போக்கிலானது என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக தமிழ் மக்கள் கட்சி பேதங்கள் மறந்து அணிதிரள வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுக்குளத்துக்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியில் இராணுவத்தினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு பாரிய புத்த கோயிலாக மாற்றும் நோக்கில் மதில் அமைக்கப்பட்டு வருகின்றது. 

மேற்படி கட்டுமான வேலைகளில் பெருமளவு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு அவசர அவசரமாக மதில் கட்டியெழுப்பும் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

ஸ்ரீலங்கா அரசு தனது இராணுவ மற்றும் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் மேற்படி அத்துமீறிய பௌத்தமயமாக்கல் நடவடிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. 

கட்டமைப்புசார் இன அழிப்பை மேற்கொள்வதன் மூலம் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழிக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசு கடந்த ஏழு தசாப்தங்களாக தீவின் வடக்கு, கிழக்கில் எல்லைக்கிராமங்களில் தீவிரமாக மேற்கொண்டு வந்துள்ளது. 

தற்போது தமிழர் தாயகத்தின் வடக்குப் பிரதேசத்தின் இதயப் பகுதியாகவும், முழுமையாக தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதியாகவும் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு பிரதேசத்தில் தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை அழித்து பௌத்த மேலாதிக்கத்தை ஏற்படுத்தி படிப்படியாக சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் இராணுவக் குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழர்களது சனத்தொகை பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கிலும் மேற்படி பௌத்த விகாரை அமைக்கப்பட்டுவருகின்றது. 

மக்களின் உணர்வுகளை கணக்கிலெடுக்காது தமது மேலாதிக்க மனோபாவத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் இந்த ஆக்கிரமிப்பு. ஆட்சிகள் மாறியபோதும் சிங்கள தேசத்தின் அணுகுமுறை மாறுவதில்லை என்பதை இது மீண்டும் எமக்கு எடுத்துரைக்கின்றது. 

இராணுவத்தினரைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்புசார் இனவழிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமான மேற்படி பௌத்த கோவில் அமைக்கும் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். 

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ள இரணைமடுக் குளத்தை சிங்கள ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருவதன்மூலம் ஒட்டுமொத்த கிளிநொச்சி மாவட்டத்தையும் சிங்களமயமாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த பௌத்த விகாரை அமைக்கும் செயற்பாட்டைத் தடுத்துநிறுத்த அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக ஓரணியில் திரளவேண்டிய தருணம் இதுவாகும்." என்றுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்