இலங்கை
Typography

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்துக்குள் கஞ்சா கடத்தப்படுகின்றமை தொடர்பில் கடற்படைக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு ஏதும் இருக்கின்றதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டிய தேவை ஏற்படுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்குள் கஞ்சா போதைப் பொருளின் வருகை அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண மட்டத்திலான பொலிஸ்- பொது மக்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  “இதுவரை காலமும் பயங்கரவாத மனநோக்குடன் தான் பொலிஸ் சேவை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இயங்கியது. போர்க் காலத்திலிருந்து சமாதான காலத்திற்குத் திரும்பியுள்ளோம் என்ற உணர்வு இப்பொழுதுதான் சிறிது சிறிதாகப் பரவத் தொடங்கியுள்ளது. 

எமது நாட்டின் பாதுகாப்புப் பகுதியின் மறுசீரமைப்பு இன்று முக்கியமான ஒன்றாக உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் கருதப்படுகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். 

இப் பகுதியில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் குற்றச் செயல்கள் மிக அதிகரித்திருப்பது எம்மையும் பொலிஸ் சேவையையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. 

களவு, கொலை, கற்பழிப்பு, சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் காண்கின்றோம். அது மட்டுமல்ல வடக்கு மாகாணம் கஞ்சா விற்பனையின் மத்திய நிலையமாக மாறியிருப்பதும் மிகவும் வெறுப்பையும் வேதனையையும் தருகின்றன. 

பொலிஸார் பல கடத்தற் செயற்பாடுகளை முறியடிக்கின்ற போதும் இச் செயற்பாடுகள் தொடர்கின்றன என்றால் இதன் பின்னணி என்ன? கடத்தலுக்கும் எமது எல்லைப்புற கடல் காவல் துறையினருக்கும் இடையில் ஏதாவது ஒற்றுமைகள், உடன்பாடுகள் இருக்கின்றனவா என்பது பற்றி எல்லாம் ஆராயப்பட வேண்டியுள்ளது.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS