தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால், 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்யும் என்பதால், அவ்வாறான பிரதேசங்களில் சூறாவளி வீசக்கூடும் என்றும் அந்நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, ஏதாவது அனர்த்தம் ஏற்படபோகிறதென கண்டறிந்தால், அவைதொடர்பில், 117க்கு உடனடியாக அறிவிக்குமாறும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த சீரற்ற வானிலையால், காலி மாவட்டமே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் போபே, போத்தல, அக்மீமன பிரதேச செயலாளர் பிரிவுகளின், 1,960 குடும்பங்களைச் சேர்ந்த 7,742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை, இன்னும் சில நாட்களுக்கு நீடிக்குமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்துள்ளது.
இதேவேளை, சீரற்ற வானிலையால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கு, இராணுவத்தினர் உஷார் நிலையில் இருக்கின்றனர் என்று இராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது நிலவுகின்ற சீரற்ற வானிலை, எதிர்வரும் 24 மணிநேரத்துக்கு நீடிக்குமாயின், இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை, குருநாகல், பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய ஏழு மாவட்டங்களில், மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் தென்பட்டுள்ளதென, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எதிர்வு கூறியுள்ளது.