இலங்கை

வடக்கு- கிழக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி வடக்குப் பகுதி கடலில் மீன்பிடியில் ஈடுபடுவது மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்துவதுத் தொடர்பிலும் அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

மேலும், வடக்கு பகுதி கடல் பிரதேசங்களில் தென்னிலங்கை மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப்படையினர் அவர்களுக்கு உதவுவதாக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்ற நிலையில், இந்த விடயம் தொடர்பிலும் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மீன்பிடித்துறை அமைச்சர், விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.