இலங்கை
Typography

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸ் ஸ்மித் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இலங்கையில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் கற்பனைக்கு எட்டாத போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கையின் மனித உரிமைகள் கரிசனைகள்’ என்ற தலைப்பில் நடந்த அமெரிக்க காங்கிரசின் உப குழுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றிய போதே கிறிஸ் ஸ்மித் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் உள்நாட்டுப் போர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், முடிவுக்கு வந்தது, 25 ஆண்டு கால போரினால், ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தனர்.

பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையிலான கொடூரமான இன மோதல்களாக இந்த உள்நாட்டுப் போர் இடம்பெற்றது. போரில் ஈடுபட்ட இருதரப்புகளான இலங்கை ஆயுதப் படைகளும், தமிழ்ப் புலிகளும் கற்பனை செய்து பார்க்க முடியாத போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளன.பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னமும் நீதி என்பது கண்ணிற்கு தென்படாத விடயமாகவே உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சீர்திருத்த அரசாங்கம் மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும், நீதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும், வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும், பொறுப்புக்கூறல், மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் என்று பலர் கருதிய போதிலும், அவர் போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இன நல்லிணக்கத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்ட போதிலும், சமூகங்கள் மத்தியில் பிணைப்பை அதிகரிக்க ஜனாதிபதி எதனையும் செய்யவில்லை. இரு சமூகங்கள் மத்தியிலான, அரசியல் துருவமயப்படுத்தல் அதிகரித்துள்ளது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்