இலங்கை
Typography

நாட்டில் மீண்டும் ஏகாதிபத்திய ஆட்சியொன்றுக்கு இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

“2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது, அன்று நாட்டில் காணப்பட்ட ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகவேயாகும். இந்த அனுபவங்களை மறந்துவிட்டவர்கள், இன்று மீண்டும் நாட்டுக்கு ஏகாதிபத்திய ஆட்சியை வேண்டி நின்ற போதும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டு மக்கள் வைத்த எதிர்பார்ப்பு வீண்போவதற்கு இடமளிக்கப்போவதில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிக்கவரெட்டிய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஏகாதிபத்திய ஆட்சி யுகத்திற்கு முடிவுகட்டி, மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த சுதந்திரமும் ஜனநாயகமும் நூற்றுக்கு இருநூறு வீதம் இன்று நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய ஆட்சியை உயிரற்ற ஆட்சியாக அடையாளப்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றபோதும், இது சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பயணம் என்பதை அவர்கள் அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கிடைக்கப்பெற்றுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பிழையாக பயன்படுத்தி அரசாங்கத்தை சாடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றபோதும், நாட்டில் உள்ள கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் ஜனநாயகத்தை மதிக்கின்ற அனைவரையும் ஒன்றுசேர்த்து நாட்டுக்குத் தேவையான சரியான அரசியல் மற்றும் அபிவிருத்திப் பயணத்தை மேலும் பலப்படுத்தி முன்கொண்டு செல்கின்றோம்.

கடந்த மூன்றரை வருட காலமாக நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துடன் விலகிச் சென்றிருந்த சர்வதேசத்தை மீண்டும் தாய் நாட்டுடன் நெருக்கமாக்குவதற்கும் நாட்டுக்குத் தேவையான பல வெற்றிகளை கொண்டு வரவும் முடிந்திருக்கின்றது. இந்தப் பயணத்தை பின்னோக்கி திருப்புவதற்கு எவரும் உடந்தையாக இருக்கக் கூடாது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்