இலங்கை
Typography

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்கா, மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகியுள்ள போதிலும், அந்தத் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாய நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 

2015ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக ஒப்புதல் வழங்கியமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜீ.எல் பீரிஸ் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த வாரம் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது. ஆனால் விலகும் போது மனித உரிமை பேரவையை கடுமையாக விமர்சித்திருந்தது. அவ்வாறு விமர்சித்த பின்னரே அமெரிக்கா விலகியது.

அத்தோடு, மனித உரிமை பேரவை பக்க சார்பாக செயற்படுவதாகவும் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மனித உரிமை தொடர்பாக எவ்வித செயற்பாடுகளையும் மேற்கொள்ளாதெனவும் தங்களுடைய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்து கொள்வதாகவும், இதனால் இது அரசியல் செயற்பாடுகளெனவும் மனித உரிமை சட்டத்திற்கு உட்பட்ட வகையில் செயற்படவில்லையெனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

இதனையே 4 வருடங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்திலும் கூறினோம். இதனையே தற்போது அமெரிக்காவும் கூறியுள்ளது. ஆனால் நாங்கள் எவ்வித மோசமான வார்த்தைகளும் பிரயோகிக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் அமெரிக்காவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதை தாமதப்படுத்தியமையினாலேயே, இன்று இராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. அப்போது எமது நாட்டு இராணுவம் எவ்வாறான தவறை செய்தது என்பதை சர்வதேச சட்டத்தின் மூலம் நிரூபிக்குமாறும் கோரியிருந்த அதேவேளை எமது இராணுவம் எவ்வித தவறையும் செய்யவில்லை. அவர்கள் நிரபராதிகள் என்று நிரூபிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம்.

ஆனால், தற்போதைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி மனித உரிமை பேரவையில் எமது இராணுவத்திற்கு எதிராக முன்வைத்த பரிந்துரைகளை இலங்கையின் பரிந்துரை போன்று அனைத்து நாடுகளிடமும், அந்தப் பரிந்துரைக்கான அனுசரணையை கோரியிருந்தது. அதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு, 2017ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் மேற்படி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட அவகாசத்தை கோரியிருந்தது.

அதன் பின்னர் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அல் ஹுசைன் ஜெனீவாவில் ஊடக சந்திப்பொன்றில், இலங்கைக்கு எதிரான பரிந்துரைக்கு மனித உரிமை பேரவையில் வேறு எந்த நாட்டின் அனுமதியும் கிடைக்கப்பெறவில்லையென கூறியிருந்தார்.

அதன்பின்னர் நாட்டின் அரசியலமைப்பை மாற்றியமைத்தல், இராணுவத்தை மறு சீரமைப்புச் செய்தல், வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுதல் என அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு இவை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டது.

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்கா அந்தப் பேரவையிலிருந்து விலகியுள்ள போதிலும் அமெரிக்காவின் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாய நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைமைக்கு தற்போதைய அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்