இலங்கை
Typography

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி, எஞ்சியுள்ள காலத்தில் தனித்து ஆட்சியமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பது நிச்சயமற்றதாகியுள்ள நிலையில், அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால், உடனடியாக தனித்து ஆட்சியமைக்கக்கூடிய வகையிலான பின்னணிகளை அமைக்கும் வகையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் இரகசியப் பேச்சுகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினரான பிரபல சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் ஊடாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியைச் சேர்ந்த சிலருடனும் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த 107 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 23 பேரும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். இந்நிலையில் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியான பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான தீர்மானங்களை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தனித்து அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான மேலதிக உறுப்பினர்களை எதிரணி தரப்பிலிருந்தோ அல்லது தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரை தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்கச் செய்தோ தனித்து தமது அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்