இலங்கை
Typography

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய நாடுகளிடம் மீண்டும் கால அவகாசத்தைக் கோர முடியாது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவுடன் (ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை) இடம்பெறும் தேன்நிலவு திருப்தியளிக்கும் வகையில் அமைவது அவசியமாகிறது. எனவே, அதனைக் கவனத்திற்கொண்டு பரிந்துரைகள் அனைத்தையும் செயற்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு அம்சமாகவே காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, “எதிர்வரும் மார்ச் மாதம் நாம் மனித உரிமைகள் பேரவைக்கு விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்க  வேண்டியுள்ளது. அது தொடர்பில் நாம் செயற்பாடுகளை மேற்கொள்வது அவசியம். எமக்கு மேலும் கால அவகாசம் கேட்கமுடியாது.

நல்லிணக்கத்தை ஏற்புத்தும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது இதில் முக்கியமாகிறது. அதில் பிரதான அம்சம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள காணாமற்போனோர் தொடர்பான அலுவலகமாகும், மீண்டும் முன்னைய நிலை தோற்றுவிக்கப்படக்கூடாது என்பதைக் கருத்திற் கொண்டு நாம் செயற்படுகிறோம்.

இது மட்டுமன்றி இதற்கு முன்னர் எமக்கு தரப்பட்டுள்ள விடயங்களை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோமா என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

மேற்படி செயலகத்தை மேற்கொள்வது ஒருபுறமிருக்க வடக்கு கிழக்கு மக்களுக்கான காணிகளை மீளக் கையளித்தல் முக்கியமாகும். அதில் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. படையினரும் இதற்கு இணங்கியுள்ளனர்.

எதைச் செய்தாலும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் அவற்றை மேற்கொள்வது அவசியமாகிறது. இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது அடுத்த அம்சமாகும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சம்பூரில் பெருமளவு காணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டிருந்தன. அவற்றை மீள அரசு பொறுப்பேற்று மக்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. காணாமற்போனோர் தொடர்பான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள முக்கியமான படுகொலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் சிறந்த முன்னேற்றம் காணப்படுகிறது. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மற்றும் திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்படட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று பரணகம ஆணைக்குழுவின் காலம் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அது ஒரு பொது ஆவணமாக தற்போதுள்ளது. இதை எவரும் ஆராய முடியும். அடுத்து அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு குழுவில் நானுமுள்ளேன். நான் உள்ளடங்கும் குழுவின் அறிக்கையும் தயாராகிவிட்டது. அது நிறைவேற்று குழு தலைவரான பிரதமரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. மனித உரிமை தொடர்பான செயற்திட்டம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் அமைச்சர்கள், சாகல ரத்நாயக்க, மங்கள் சமரவீர, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் நானும் உள்ளடங்குகிறேன். 

மனித உரிமை அறிக்கை 2017இல் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இந்த குழு அது தொடர்பில் செயற்படுகிறது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பல அமைச்சுக்களினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS