இலங்கை
Typography

தாய் நாட்டின் மீது உண்மையான அன்பும் அக்கறையும் இருந்தால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்கக் குடியுரிமையை தூக்கி எறிய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

தனது சொந்த நாட்டை பொருட்படுத்தாது பிறிதொரு நாட்டின் குடியுரிமையை பெற்றிருப்பது தார்மீகத்துக்கு எதிரான செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அகில விராஜ் காரியவசம் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின், அமெரிக்கக் குடியுரிமையை இரண்டே மாதங்களில் இரத்துச் செய்ய முடியுமென்றும், இல்லையேல் இரத்துச் செய்ய அவசியம் இல்லையென்றும் கோட்டாபய ராஜபக்ஷ தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவித்திருந்தார். இதன்மூலம் அவர் இந்நாட்டின் கடவுச்சீட்டு மற்றும் குடியுரிமையைப் பொருட்படுத்தவில்லையென்பது எமக்கு புரிகிறது.

நாட்டில் மீண்டும் ஹிட்லர் ஆட்சி வர வேண்டுமென்றே சிலர் விரும்புகிறார்கள். இவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவையே ஹிட்லர் என்று கூறுகிறார்கள். ஹிட்லருக்கும் கோட்டாவுக்கும் பல ஒத்த இயல்புகள் உள்ளன. ஹிட்லர் ஜேர்மனை ஆட்சி செய்திருந்தாலும், அவர் ஆஸ்திரியாவின் பிரஜை. அதேபோன்று கோட்டாவும் அமெரிக்கப் பிரஜை. ஜேர்மன் மற்றும் ஆஸ்திரிய மக்கள் ஹிட்லர் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். உலகில் எந்தவொரு மூலையிலும் மீண்டும் ஹிட்லர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக அவர்கள் உலக நாடுகளுக்கு நிதியுதவி செய்கின்றனர். ஹிட்லருக்கு அந்நாட்டில் எவ்வித வரவேற்பும் இல்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்