இலங்கை
Typography

முல்லைத்தீவு, நாயாறு, செம்மலை பகுதியில் விகாரை அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களத்தின் மூலம் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முன்னெடுத்த போராட்டத்தினால், காணி அளவீட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

நாயாறு பாலத்துக்கு அண்மையாக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை அடாத்தாக பிடித்து- பல நூறு ஆண்டுகளாக பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில், குருகந்த ரஜமஹா விகாரை என்னும் விகாரை ஒன்றை அமைத்து, அந்த இடத்தை சொந்தமாக்குவதற்கும் அப்பகுதியில் மேலதிக காணிகளை அபகரிப்பதற்குமாக தொல்பொருள் திணைக்களம் ஊடாக நில அளவைத் திணைக்களத்தால் அளவீட்டு நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே இப்பகுதிகளில் வன ஜீவராசிகள் திணைக்களம் ஊடாக 21,500 ஏக்கர் நிலங்களை இயற்கை ஒதுக்கிடங்களாக பிரகடனப்படுத்தி சுவீகரிக்கும் அரசினது முயற்சிக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் தொல்லியல் திணைக்களத்திற்கான காணி சுவீகரிப்பும் சத்தமின்றி முன்னெடுக்கப்படவிருந்தது.

இந்நிலையில், பொது மக்களும் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் திரண்டு இந்த நில அளவீட்டுக்கு எதிராக எதிர்ப்பினை குறித்த இடத்துக்கு சென்று நிலசுவீகரிப்பிற்கென வந்திருந்த நில அளவை திணைக்களத்தினரை முற்றுகையிட்டு அங்கிருந்து வெளியேறுமாறு கோஷமிட்டதோடு நில அளவீட்டை மேற்கொள்ள விடாது தடுத்து நிறுத்தினர்.

அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரதாபன் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக தொல்பொருள் திணைக்களத்தால் அளவீட்டுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையாலேயே நில அளவீட்டு திணைக்களத்தினர் அளவீட்டை மேற்கொண்டதாகவும் அதற்கான அறிவிப்பை தாம் விடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இருந்தபோதிலும், அங்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் கவனத்துக்கு கொண்டு வரப்படாமல் மேற்கொள்ளப்படும் இந்த அளவீட்டை அனுமதிக்க முடியாது என பிரதேச செயலாளரிடம் தெரிவித்ததுடன், அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறும்போது இந்த காணி சுவீகரிப்பு குறித்து கலந்துரையாடி முடிவெடுக்கலாம் எனவும் அதுவரை அளவீட்டை நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு இணங்க அடுத்த முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறும் வரை இந்த அளவீட்டு பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பிரதேச செயலாளர் மக்களிடம் கூறியிருந்தார்.

இந்த காணி அளவீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்