இலங்கை
Typography

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரசாங்கம் முறையாக நிறைவேற்றுவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸூக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே, சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது மட்டுமல்லாது, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலதிக கால அவகாசத்தினையும் கோரியிருந்த போது, அந்தக் கோரிக்கையை சர்வதேச சமூகம் ஏற்று அனுமதித்தும் இருந்தது. ஆகவே அரசாங்கமானது தமது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க முடியாது.

கடந்தகால சம்பவங்கள் மீள நிகழாமையை உறுதி செய்யும் முகமாக ஒரு புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்படுவது அவசியம். மனித உரிமைகள் பேரவையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ள அம்சங்களில் இதுவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் 1988ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு கருமங்கள் இடம்பெற்று வந்துள்ளது. தற்போது இதனை முன்னெடுத்து செல்வதற்கு அரசியல் விருப்பும் தைரியமுமே தேவைப்பாடாக உள்ளது.

இந்த விடயங்களில் எமது சொந்த மக்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக தேவைப்படும் அனைத்து அழுத்தங்களையும் கொடுக்கும் அதேவேளை தொடர்ந்தும் இந்த கருமங்களில் எமது ஈடுபாட்டினை கொண்டிருப்போம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS