இலங்கை
Typography

தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திலுள்ள சிவஞானத்தின் வீட்டில் நேற்று புதன்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளை கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலின் போது, யாழ். மாவட்ட கிளை கூடி ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் போது, முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை தமிழரசு கட்சியின் நீண்ட கால உறுப்பினர் ஒருவரையே நிறுத்த வேண்டுமென ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கட்சி யாப்பின் அடிப்படையிலும், கட்சி அங்கத்துவ அடிப்படையிலும், தமிழரசுக் கட்சியின் சார்பாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும், உறுப்பினர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும். அந்தவகையில், கூட்டமைப்பின் உறுப்பினரும், தமிழரசு கட்சியின் உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், இது தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் எனின், மாவை சேனாதிராஜாவையே முதலாவதாக ஆதரிப்பேன். 2013ஆம் ஆண்டு தேர்தலின் போது, மாவை சேனாதிராஜாவின் பெயரையே நான் பரிந்துரைத்தேன்.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS