இலங்கை
Typography

போர்க்கால குற்றங்களுக்கு நல்லிணக்க விசேட செயலணி மூலம் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதியும், நல்லிணக்கச் செயலணியின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“சுதந்திரத்திற்குப் பின்பு உருவான எந்த அரசாங்கமுமே தமிழருக்கான பணியை ஆற்றவில்லை. எனவேதான் தமிழ் மக்களின் மனதில் விரக்தி, கோபம் என்பன ஏற்பட்டு அவர்கள் ஆயுதமாக மாறவே யுத்தம் ஏற்பட்டது என நான் கருதுகின்றேன்.” என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளதாவது, "யுத்தம் இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் பாரிய தேவைகள் உள்ளன. அதில் யாழ்ப்பாணத்துக்கும் பாரிய தேவையும் உண்டு. அதில் ஒரு சிறு தேவையை பூர்த்தி செய்த திருப்தி இன்று கிடைத்துள்ளது. நாட்டில் சிங்கள மக்களுக்குக் கிடைக்கும் சகல உரிமைகளும் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசு நல்லிணக்கத்திற்காக முயல்கின்றது. 

இதற்காக அரசியல் தீர்வு திருத்தத்திற்காகவும் பாடுபடுகின்றோம். நல்லிணக்கத்திற்காக அரசு பாரிய சவாலை எதிர்கொள்கின்றது. நல்லிணக்கத்திற்காக விசேட செயலணியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போரின்போது இடம்பெற்ற குற்றங்களுக்கு தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

அதேவேளை, இவ்வாறான செயல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதனை உறுதி செய்யும் அலுவலகமே தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க செயலணியாகும். அதன் தலைவி நான் ஆகினும் இது ஜனாதிபதியின் கீழேயே இயங்குகின்றது. இங்கு இடம்பெற்ற சம்பவங்களினால் உங்கள் மனங்களில் விரக்தி , கோபம், ஆத்திரம் இருக்கும் என நம்புகின்றேன். அதற்கும் அப்பால் செல்ல வேண்டிய தேவையும் உள்ளது. இருப்பினும் இவற்றில் இருந்து உங்களால் மறக்க முடியாது என நம்புகின்றேன். 

இங்கு நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் சிங்கள மக்கள் ஏனையவர்கள் மீது உள்ள கருத்தை மாற்றவேண்டும். அதேபோல் தமிழர்கள் தங்கள் கசப்புணர்வுகளை மாற்றி சிங்கள மக்களோடு உறவைப் பேண வேண்டும். சிங்கள மக்களில் அநேகர் தமிழர்களை நேசிக்கின்றனர். அவர்கள் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிக்காக வெட்கமும் கவலையும் கொள்கின்றனர். இனிவரும் காலங்களில் அனைவரும் ஒளிமயமான நாட்டை நோக்கி முன்னேற ஆவண செய்ய வேண்டும். அதற்கும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்