இலங்கை
Typography

இராணுவத்தினரைப் பழிவாங்கும் நோக்கில் இராணுவத்தில் ஆட்குறைப்புச் செய்யப்படுவதுடன், முகாம்கள் மூடப்படுவதாக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) குற்றஞ்சாட்டியுள்ளது. 

இதுவரை இராணுவத்திலிருந்து 33 படையணிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. 939 உயர் பதவிகள் இல்லாமல் செய்யப்பட்டிருப்பதுடன், 23 ஆயிரத்துக்கும் அதிகமான சாதாரண அதிகாரிகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பிய கேள்வியின் போதே தினேஷ் குணவர்தன இந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இராணுவத்தின் நிரந்தரப் படையணிகள் 112இல் இருந்து 98 ஆகவும், தொண்டர் படையணி 80இல் இருந்து 61 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இராணுவத்திலிருந்து 33 படையணிகள் குறைக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி இராணுவ உயரதிகாரிகளின் எண்ணிக்கை 938ஆல் குறைக்கப்பட்டிருப்பதுடன், சாதாரண அதிகாரிகளின் எண்ணிக்கை 23 ஆயிரத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

இப்படியான ஆட்குறைப்பின் ஊடாக 100ற்கும் அதிகமான முகாம்கள் மூடப்பட்டுள்ளன. நந்திக்கடல், வவுனியா மெனிக்பாம், துணுக்காய், மல்லாவி, யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பு, வெலிஓயா, கிளிநொச்சி, நெல்லியடி என பல இடங்களில் உள்ள முகாம்கள் மூடப்பட்டுள்ளன. எனினும், இதனை இராணுவப் பேச்சாளர் மறுத்திருப்பதுடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவற்றை மூடும் வகையில் இராணுவப் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச சக்திகள் மற்றும் பிரிவினைவாத தமிழ் டயஸ்போராக்களுக்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் நோக்கிலேயே இராணுவ முகாம்கள் இவ்வாறு குறைக்கப்படுகின்றன. குறிப்பாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமக்கு உதவியவர்களுக்கான உறுதிமொழிகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான ஆட்குறைப்பினால் பல இராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகின்றன. மேஜர் பதவிகள், கேணல் பதவிகள், லெப்டினட் கேணல் பதவிகள் உள்ளிட்ட பல பதவிகள் கனவாகின்றமை கவலைக்குரியதாகும். அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைனுக்கு வழங்கிய ஜெனீவா உறுதிமொழிகளுக்கு அமைய இராணுவத்தினர் குறைக்கப்படுகின்றனர். நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்தினரை நிர்வாக ரீதியாகப் பழிவாங்குகிறது.

நாட்டை பிளவுபடுத்துவதற்கு போராடிய குழுவினருக்கு நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்ட முதலாவது எல்.ரி.ரி.ஈ உறுப்பினருக்கு அரச அனுசரணையில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

ஆவா குழு படுகொலைகளில் ஈடுபடுகிறது. ஒட்டுசுட்டானில் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே இராணுவ முகாம்களும் குறைக்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்