இலங்கை
Typography

வடக்கு மாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நினைத்தால் உடனடியாகவே தீர்வினைக் காணலாம் என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

அமைச்சர்கள் விவகாரம் குறித்து நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு தகவல் தருகையிலேயே அவைத்தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சட்டத்தின்படி அமைச்சர்களை நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. அதேபோல் ஆளுநர் நியமனம் செய்யும் அமைச்சர்கள் தொடர்பான ஆலோசனைகளை நடாத்தி அதனை ஆளுநருக்கு வழங்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கின்றது. இங்கே முதலமைச்சர் தனியாகவோ அல்லது ஆளுநர் தனியாகவோ செயற்றபட இயலாது. இருவரும் ஒன்றாகவே செயற்படவேண்டும்.

அதேசமயம் அமைச்சர் பா.டெனீஷ்வரன் விடயத்தில் அவரை முதலமைச்சர் பதவி நீக்கம் செய்த முறமை பிழையானது என்றே கூறப்பட்டிருக்கிறது. மற்றபடி டெனீஷ்வரனை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று மேன்முறை யீட்டு நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இப்போதும் கூட அமைச்சர் டெனீஷ்வரனை பதவி நீக்கம் செய்யுங்கள் என்று ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்கினால் அமைச்சர் டெனீஷ்வரன் பதவி நீக்கப்படுவார். அதன் பின்னர் அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சைகளே இருக்காது.

இதனை முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனும், ஆளுநர் றெஜினோல்ட் கூரேயும் புரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் புரிந்து கொண்டால் எல்லாம் சரியாகும். மேலும் ஆளுநர் முறையாக வர்த்தமானி பிரசுரம் வெளியிட்டிருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது என முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், வர்த்தமானி குறித்து இங்கே பிரச்சினை இல்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS