இலங்கை
Typography

கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய வளவினை ஆக்கிரமித்து இராணுவம் அமைத்து வரும் புத்த விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி ஜனநாயக வழியிலான போராட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளன. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் கிளிநொச்சியில்  நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்டவற்றின் உறுப்பினர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

வரலாற்று சிறப்பு மிக்க இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் அருகில் இவ்வாறு விகாரை அமைப்பது மக்கள் மத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இது தொடர்பிலலான செய்திகள் ஊடகங்களில் வெளியானதனை தொடர்ந்து பல்வேறு மட்டங்களில்  அதிர்வலையை ஏற்படுத்தியது. கிளிநொச்சியில் மாத்திரமன்றி வடக்கு கிழக்கில் உள்ள சிறப்பு மிக்க இந்து ஆலயங்களுக்கு அருகில் இவ்வாறு விகாரை அமைப்பது தொடர்ந்த வண்ணம் உள்ளது.

எனவேதான் இதற்கான எதிர்ப்பினை வெளிப்படுத்தும்  நோக்கில் தமிழ்த் தேசிய மக்கள்  முன்னணி பகிரங்க கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைத்திருந்தது. இந்தக் கலந்துரையாடலின் போதே கிளிநொச்சியில் மாவட்டம் தழுவிய ரீதியில் மாபெரும் எதிர்ப்பு போராட்டமொன்றை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS