இலங்கை
Typography

தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் சிங்கள மயமாக்கல் மற்றும் தமிழர் விரோத செயற்திட்டங்களை எதிர்த்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி யாழில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.  

சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்த சின்னங்களை வலிந்து வடக்கு- கிழக்கில் அரசாங்கமும், அதன் கூட்டு சக்திகளும் அமைத்து வருவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக சமூகம் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் ஆராய்ந்தனர். இதன்போதே, இந்த எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தினை முன்னெடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது, “மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படாது, மக்களின் காணிகளை இராணுவத்தினர் கபளீகரம் செய்து வருகின்றார்கள். அதனைக் கண்டித்தும் மாபெரும் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. 

தற்போது காணாமற்போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகம் ஒன்றினை அமைப்பதாக கூறியிருந்தாலும், காணாமற்போனவர்கள் பற்றி முழுமையான பதில் எதுவும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை. 

ஆனால், காணாமற்போனவர்கள் பற்றி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேட்ட போது, இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டுமென நல்லிணக்க ஒருங்கிணைப்பின் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க  குமாரதுங்க கூறியிருக்கின்றார்.  இப்போது பதில் கூறிவிட்டால் யுத்தக் குற்றம் ஆகிவிடும் என்பதற்காகவும், குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாத நிலைமையும் அலுவலகத்திற்கு இருப்பதனாலும், இவ்வாறு கூறப்படுகின்றது. 

ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ஏற்ப இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிபதிகளையும் ஏற்றுக்கொள்ளாது, என்றும் கூறியிருக்கின்றது.  எனவே, இவ்வாறான விடயங்களைக் கண்டித்தும், அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். 

இந்த அரசாங்கமும், முன்னைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலைக்கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரல்களை நிறுத்த வேண்டுமென்றும், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை வெளிப்படுத்த தீர்மானித்துள்ளனர்.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS