இலங்கை
Typography

சலுகைகளுக்காக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுபவர்கள் நாட்டு மக்களின் உரிமைகள் குறித்து மனிதாபிமானத்தோடு சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பணிப்புறக்கணிப்பினால் பாதிக்கப்படுவது நாட்டிலுள்ள அப்பாவி மக்களேயன்றி அரசாங்கம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பொதுப் போக்குவரத்து சேவைகள், இலவச சுகாதார சேவைகள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றவர்கள் நாட்டின் அப்பாவி ஏழை மக்களேயன்றி வசதிபடைத்தவர்கள் அல்ல. நேற்று இடம்பெற்ற புகையிரத வேலை நிறுத்தத்தின் காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீடுகளுக்கு திரும்பிச் செல்லும் பிள்ளைகள் உட்பட பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் வருந்தத்தக்கது.

தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக எந்தவொருவருக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. கடந்த அரசாங்கத்தை போன்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை.

எனவே நாட்டின் அப்பாவி பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தாது, அறிவு பூர்வமாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத மற்றும் மருத்துவத் துறை உள்ளிட்ட வேலைநிறுத்தங்களுக்கு தயாராகிவரும் தொழிற்சங்கங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்