இலங்கை
Typography

நடைபெற்று முடிந்த யுத்தத்தை முறையாக ஆவணப்படுத்துவது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 06), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓய்வுபெற்ற படைதளபதிகளை இரகசியமாக சந்தித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில், உத்தியோகப்பூர்வமான தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து கொழும்பு ஊடகமொன்றிடம் கருத்து தெரிவித்த இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து, “இது தொடர்பான செய்திகளை ஊடகங்களினூடாக தானும் அறிந்து கொண்டதாகவும், எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வமான தகவல்கள் தனக்கு தெரியாது” எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த இரகசிய சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரிடம் கேட்டறிந்து கொள்ள முடியும் எனவும், அவர்களே ஜனாதிபதியின் இவ்வாறான சந்திப்புக்கள் குறித்து அறிந்து வைத்திருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ரஞ்சித் செனவிரத்னவிடம் இது குறித்து வினவியபோது, “இது தொடர்பான முழுமையான எந்தவொரு தகவல்களும் தனக்கு தெரியாது. ஊடகங்களில் அவ்வாறான செய்திகள் வெளியாகியிருப்பதை நான் இதுவரையில் அறிந்துகொள்ளவில்லை.” எனவும் பதிலளித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நடைபெற்று முடிந்த யுத்தத்தை முறையாக ஆவணப்படுத்துவது தொடர்பான இரகசிய சந்திப்பு தொடர்பில், முறையான குறித்த ஆவணம் வெளிவரும் வரையில், இரகசியம் பேணப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS