இலங்கை
Typography

கொலை மற்றும் கடத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 'நேவி சம்பத்' என அழைக்கப்படும் சந்தன ஹெட்டியாரச்சி பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2008 காலப்பகுதியில், தமிழ் பேசும் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, அவர்களை கடத்தி கப்பம் கோரியமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கின் சந்தேகநபரான இவர், நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல், கொழுப்பு கோட்டை லோட்டஸ் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

41 வயதான குறித்த சந்தேகநபர், வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, கைதாகும்போது அவரிடம், போலியாக தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையொன்று இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடமிருந்து, பொல்வத்த கால்லகே அசோக எனும் பெயருடனான அடையாள அட்டை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர், பல்வேறு சந்தர்ப்பங்களில் வழக்கு விசாரணைகளிலிருந்து தவிர்ந்து வந்ததால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர், நேற்று கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா என் சில்வா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை இன்று வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதவான் அனுமதி வழங்கியதோடு, நாளை கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS