இலங்கை
Typography

வடக்கு மாகாண அமைச்சரவைக் குழப்பத்துக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண முடியும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 

மாகாண அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிவித்தால் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முடியும். ஆனாலும் சுயகௌரவத்துக்காக அவர்கள் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவராமல் இருப்பதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வடக்கு மாகாண ஆளுநர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் தமது பணிகளைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவால் மாகாண சபையின் அமைச்சரவை முடங்கிப் போயுள்ளது. இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு குழுவொன்றை அமைத்திருந்ததுடன், அந்த குழுவில் அவரும் ஒரு உறுப்பினராக இருந்தார். அவ்வாறு நியமிக்கப்பட்ட குழு சட்டரீதியானது அல்ல. அரசியல் ரீதியான விசாரணைக் குழுவாகும். இந்தக் குழுவின் அறிக்கைக்கு அமைய சிலர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டதுடன், குற்றஞ்சாட்டப்படாத அமைச்சர்களும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதற்கு எதிராக டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்கிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு வழங்கியுள்ளது. இந்த இடைக்காலத் தடையினால் மாகாணசபை அமைச்சர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளன. சட்டத்துக்கு அமைய அந்த அமைச்சரவையால் செயற்பட முடியாதுள்ளது.

இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம். மாகாண சபை அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக எனக்கு அறிவித்தால் புதிய அமைச்சர்களை நியமித்து என்னால் பிரச்சினையைத் தீர்க்க முடியும். அவர்களும் மக்களுக்கு சேவையாற்ற முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாதுள்ளனர். அதற்கு அவர்களின் கௌரவப் பிரச்சினையே காரணமாகும். மக்கள் சேவையைவிட அவர்களுடைய சுயகௌரவமும், அகங்காரமுமே முன்னிலை வகிக்கின்றன. நான் ஆளுநர் அல்ல, மக்களின் சேவகன்.

நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கே தென்பகுதியிலிருந்து மக்களுக்குப் பணியாற்ற வடக்கிற்கு வந்துள்ளேன்.

வடபகுதியிலிருந்து பல துறைசார்ந்த நிபுணர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். வடக்கில் வைத்தியசாலைகள் டொக்டர்கள் இன்றி இருக்கின்றன. அதேநேரம், தெற்கில் பல வைத்தியசாலைகளில் தமிழ் வைத்தியர்கள் நிரம்பியுள்ளனர். ஆனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த எவரும் இங்குள்ள மக்களுக்குப் பணியாற்ற விரும்பவில்லை.

இப்பகுதியைச் சேர்ந்த டொக்டர்கள் தென்பகுதியிலும் வெளிநாட்டுக்கும் சேவைசெய்கின்றனர். ஆனால் இங்கு பணியாற்ற அவர்கள் தயாராக இல்லை என்பதே அவல நிலையாகும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்