இலங்கை
Typography

மன்னார் மடுத் தேவாலயம், நாட்டின் பிரதான மத வழிபாட்டிடம் மட்டுமன்றி, நாட்டின் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான பிரதான மையம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாதத் திருவிழாக் கூட்டுத்திருப்பலி நேற்று புதன்கிழமை காலை 6:30க்கு ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து திருச்சொரூப பவனியும் திருச் சொரூப ஆசியும் வழங்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில், நாட்டைச் சேர்ந்த சகலரும் மடு தேவாலயத்தின் உதவியால் பாதுகாப்புக் கிடைத்தது என்று தெரிவித்துள்ள அவர், “ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பேதங்களின்றி, இலங்கை வாழ் மக்கள் வருகைதரும் நல்லிணக்கத்துக்கான மத்திய நிலையமாக மடு தேவாலயத்தை அடையாளப்படுத்த முடியும்.

மடு மாதாவுக்கு திருவிழா எடுக்கின்ற இந்த உற்சவம் மிகமிக முக்கியமானதாகும். அது கத்தோலிக்க சபைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது ஒன்றல்ல. அது சகலரும் பங்கேற்று, கொண்டாடுகின்ற உற்சவமாக மாற்றம் பெற்றுவிட்டது. மடு தேவாலயம், நாட்டிலுள்ள சகலரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வழிபாட்டு நிலையமாகும்.

யுத்த காலத்திலும், ஏனை சந்தர்ப்பங்களிலும், சகலரும் இந்த இடத்தில், அடிபணிந்து ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டனர். நீங்கள் அனைவரும், மடு மாதாவுக்காக மன்றாடி, தங்களுடைய எதிர்பார்பை வெளிப்படுத்துவதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள். இறைவனிடமிருந்து கருணையைப் பெற்றுக்கொள்வதற்கு அதற்கான, இலங்கையிலுள்ள சகல பிரதேசங்களிலிருந்து, சிங்கள, தமிழ், கிறிஸ்தவ மற்றும் வெறெந்த மதங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்திருக்கின்றீர்கள்.

மத நம்பிக்கைக்கொண்ட பிரதான வழிபாட்டிடம் மட்டுமன்றி, நல்லிணக்கத்துக்கான மத்திய நிலையமாக மடு தேவாலயத்தை அறிமுகப்படுத்தமுடியும். கடந்த 30 வருடகால யுத்தத்தின் போது எங்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. நாங்கள், ஒருவரையொருவர் பலியெடுத்துக்கொண்ட சந்தர்ப்பங்களும் இருந்தன. எனினும், இவ்வாறான உற்சவங்களின் ஊடாக, எங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

இவ்வாறான உற்சவங்கள் இரண்டு இம்மாதத்தில் நடைபெற்றன. அவை, வடக்கில் மடுமாதா திருவிழா, தெற்கில் கதிர்காமம் உற்சவம். இவ்விரு உற்வசங்களின் போது, வடக்கிலிருந்து தெற்குக்கும், தெற்கிலிருந்து வடக்குக்கும் மக்கள் வருகைதந்தனர். இது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களாகும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்