இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் பெற்ற பெரும் கடன் சுமையினால் நல்லாட்சி அரசாங்கம் சுதந்திரமாக மூச்சு விட மூன்று வருடங்கள் கடந்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி மாவட்டத்தில் காணி உறுதி பத்திரம் இல்லாத 4000 பேருக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு 3 வருடங்கள் கழிந்த பின்னரே எமக்கும் நாட்டு மக்களுக்கும் சுதந்திமாக மூச்சுவிட முடிகின்றது.

நல்லாட்சியின் முதல் பணி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகும். அதன்படி பதவி நீக்கப்பட்ட பிரதம நீதியரசர் ஸ்ரீயாணி பண்டாரநாயக்கவை மீண்டும் பதவியில் அமர்த்தியதாகும். அரசியல் சம்பிரதாயங்களை தகர்த்தெறிந்து நல்லாட்சியை அமைத்ததுடன் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

அத்துடன், பாராளுமன்ற அமர்வுகளில் 3 மாதங்களுக்கொருமுறை ஜனாதிபதி பிரசன்னமாக வேண்டும். வாரத்தில் ஒரு நாளைக்கு பிரதமர், உறுப்பினர்களின் 5 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

எமது அரசாங்கத்தில் பல சுதந்திர ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி பொலிஸ், தேர்தல், நீதிமன்ற, அரசிலமைப்பு, அரச சேவைகள் உள்ளிட்ட பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் காணாமல் போனவர்களின் காரியாலயம், தகவல் அறியும் சட்டம் என்பன நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன. நிரந்தர அபிவிருத்தி குறித்து நாம் தற்போது பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

எமக்கு கிடைத்த அரசாங்கமானது பல கடன் சுமைகளை கொண்டது. தற்போது தான் கடன் சுமையை குறைத்து வருகின்றோம். இருந்த போதிலும் தனியார் ஊடகங்கள் என்னை தூற்றாத நாளில்லை, தினசரி தூற்றுகின்றன. எனினும் எமது பணி தொடர்ந்த வண்ணமே உள்ளன.

தற்போது பெருமளவு கடன் சுமையிலிருந்து விடுபட்டு வருகின்றோம். அதன் நன்மைகள் மக்களை சென்றடைகின்றன.2020ம் ஆண்டில் எமது கடன் 70 வீதத்திலிருந்து 65% அல்லது 55% சதவீதத்திற்கு குறையும்.

செலவு குறைத்து வருமானத்தை அதிகரித்து அதன் மூலம் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதே எமது நோக்கம்.

வற் வரியை அதிகரிப்பது எமக்கு விரும்பமில்லை. எனினும் கடந்த கால கடன் சுமை காரணமாக வற் வரி அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் தோற்க இதுவே காரணமாகும்.எமது இந்தக் கடனை அடுத்த பரம்பரைக்கும் கொண்டு செல்வது சிறந்ததல்ல.தற்போது எமது தேசிய வருமானம் 17% சத விதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இயற்கை அனர்த்தங்கள் இல்லாமல் இருந்தால் இந்த வருமானம் இதை விட அதிகரித்திருக்கும்.

நாம் என்ன செய்தோம் என சிலர் வினவலாம். 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' செயற்றிட்டத்தின் கீழ் பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. சுகாதார சேவைக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

3 வருட காலத்தில் வெளிநாட்டு அந்நிய செலாவணியாக 8,500 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரணமாக பெறப்பட்டுள்ளது. ஜீ.எஸ்.பி.வரிச்சலுகை கிடைக்கப்பெற்றுள்ளது. மீன் பிடித் துறை அபிவிருத்தி கண்டுள்ளது. இன்று காணி உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றவர்களுக்கு ஏக காலத்தில சட்ட ரீதியாக கிடைக்கும்.” என்றுள்ளார்.