இலங்கை

அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் பௌத்த விகாரைகளை அதிகளவில் அமைக்கும் திட்டத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். 

தெரிவுசெய்யப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கை மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மண்டபத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சர்வேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் இரகசியமாக கிளிநொச்சிக்கு வந்திருந்த பிரதமர், அங்கு பௌத்த பிக்கு ஒருவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு அவர் பிக்குவுடன் என்ன பேசிருப்பார் என்பது சந்தேகமாகவுள்ளது.

ஒரு புறம் எமது பிரச்சினைக்கானத் தீர்வைப் பெறுவதற்கு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலை காணப்பட்டாலும், மறுபுறத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுடைய காலில் நிற்க வேண்டும் என்பதற்கான போராட்டமொன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.” என்றுள்ளார்.