இலங்கை

நமது நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான சரியான பாதை விவசாயமே ஆகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்

நாட்டைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தி செயற்திட்டங்களின்போது விவசாயம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கான முதலீடுகளின் பெறுபேறுகளும் தெளிவானதாகும் என்பதோடு, மக்களுக்கும் துரித பயன்களை பெற்றுக்கொள்ள முடியுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்லங்கா எனப்படும் பண்டைய குளக் கட்டுமான பொறிமுறையினால் அமைக்கப்பட்டுள்ள 2400 குளங்களை புனரமைப்பு செய்யும் பாரிய நீர்ப்பாசன திட்டம் மற்றும் வடமேல் கால்வாயின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக நேற்று  பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாய கைத்தொழில் துறையில் மேற்கொள்ளும் புரட்சிகர மாற்றங்களினூடாகவே கடன் சுமையிலிருந்து விடுதலைப் பெற்று பொருளாதார சுபீட்சமுடைய தன்னிறைவு பெற்ற தேசமாக எதிர்காலத்தில் முன்னேற முடியுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடாகிய போதிலும் விவசாய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு கடந்த காலத்தில் முக்கியத்துவமளிக்கப்படாமையினால் விவசாய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டவில்லையென ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

விவசாயத்துறையின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தற்போது பல உலக நாடுகள் முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அந்த முதலீடுகள் ஒருபோதும் நாட்டிற்கு கடன் சுமையாக அமையாது எனவும் குறித்த சந்திப்பின் போது தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி பெரும்பாலும் பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்தே காணப்படும் ஊழல், மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்பான கரும்புள்ளிகள் தற்போதைய அரசாங்கத்தின் மூன்று வருடகால அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இல்லை எனவும் ,எல்லங்கா குளக் கட்டமைப்பினூடாக ஒன்றுடனொன்று தொடர்பான 2400 கிராமிய குளங்களை புனரமைப்பு செய்யும் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் வடமேல் கால்வாய் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளின் ஆரம்பம் ஜனாதிபதி தலைமையில் இம்மாதம் 24ஆம் திகதி பொல்பித்திகம, கும்புகுலாவ குளத்தின் அருகே இடம்பெறவுள்ளது.

வடமேல் மாகாண விவசாய மக்கள் பல ஆண்டுகளாக சிறுபோகம் மற்றும் பெரும்போகம் ஆகியவற்றிற்கு தேவையான போதிய நீர் வசதியின்றி எதிர்நோக்கிவரும் சிரமங்களுக்கு தீர்வாகவே மொரகஹகந்த, களுகங்கை பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் மற்றுமொரு அங்கமாக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2017 ஆம் ஆண்டில் வடமேல் கால்வாய்த்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய குளங்களுக்கு நீரை வழங்கி வேமெடில்ல மற்றும் தேவஹூவ ஆகிய பாரிய நீர்த்தேக்கங்களுக்கு நீரைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் குருணாகல் மாவட்டத்தின் வட பிரதேசத்தில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு நிலையான தீர்வினை பெற்றுக்கொடுத்தல் ஆகியன இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.

வருடாந்தம் 105,000 ஏக்கர் அடி நீர்ப்பாசன நீரை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ளல், 353 சிறிய குளங்களும் 8 பிரதான குளங்களும் மகாவலி நீரினால் போஷிக்கப்படுதல், 12,500 ஹெக்டெயார் விவசாய நிலம் அபிவிருத்தியடைதல் ஆகியன இதன் பயன்களாகும்.

ஊடக நிறுவன பிரதானிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் சரத் சந்திரசிறி வித்தான மற்றும் வடமேல் கால்வாய் திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர்  கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.