இலங்கை
Typography

வடக்கில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் கொண்டுள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது என, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர், டக்ளஸ் தேவானந்தா எம்.பி, யாழ் குடாநாட்டில் ஏற்படும் சமூக விரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? என நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் குற்றச் செயல்கள் தொடர்பில், ஆவா குழுக்களைச் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகள் நடைபெறுகின்றன. சந்தேக நபர்கள் சிறையில் உள்ளனர் . குள்ள மனிதர் சம்பவம் குறித்து பொது மக்களிடம் இருந்து எந்தவொரு முறைப்பர்டும் பதிவாகவில்லை.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அக் குற்றச்செயல்களுடன், தொடர்புடைய நபர்கள் குறித்து இன்னமும் முழுமையான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பில் அரசியல் வாதிகளின் பின்னணி உள்ளதா எனவும் ஆராயப்பட்டு வருகின்றது.

வடக்கில் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளைப் பொலிஸார் எடுக்கின்றனர். இவை தொடர்பில், அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கபடுகின்றன. மக்கள் சுதந்திரமாக செயற்படும் சூழலை, சட்டம் ஒழுங்கு வரைமுறை அமைவில் உருவாக்கியுள்ளோம்.

ஆயினும் வடக்கில் தமிழ் மொழிமூல தேர்ச்சி பெற்ற பொலிஸார் இல்லாமை ஒரு பிரச்சினையே. அங்குள்ள பொலிஸாரில், 15 வீதமானமானவர்களே தமிழ் மொழித் தேர்ச்சி உடையவர்கள் என்பதைக் குறைபாடாகச் சொல்லலாம். அதனை நிவர்த்தி செய்ய வேண்டுமானால், தமிழ் மக்கள் பொலிஸ் துறையில் இணைந்துகொள்ளவதொன்றே சாத்தியமாக்கும். வடக்கில் சிவில் பாதுகாப்பை பலப்படுத்த, தமிழ் மக்களை இணைத்துக் கொள்வதில், அரசு தயாராகவே உள்ளது. தமிழ் மக்களிடம் இச் செய்தி கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS