இலங்கை
Typography

பதவிக்காலம் முடிவடைந்த மற்றும் முடிவடையவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாது, காலத்தை இழுத்தடிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) குற்றஞ்சாட்டியுள்ளது. 

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படுமா? இல்லையா? என்பதை அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் என்றும் கூட்டு எதிரணி வலியுறுத்தியுள்ளது.

மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்த்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு சுமார் 11 மாதங்கள் கடந்துள்ளன. சட்டரீதியான ஏற்புத் தன்மை இல்லாத சட்டத்துக்கே சபாநாயகர் கைச்சாத்திட்டுள்ளார். இவற்றின் அடிப்படையில் நோக்கும்போது மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என்பதற்கான செயற்பாடுகளே கடந்த 12 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

அரசாங்கம் 3 மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்கான யோசனையை கொண்டு வந்திருந்தது. இதன்போது பெண்கள் பிரதி நிதித்துவம் தொடர்பான திருத்தத்தை கொண்டு வந்து தேர்தலை ஒத்தி வைக்கும் முயற்சிகளையே அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில் 3 மாகாண சபைகள் காலாவதியாக 9 மாதங்கள் முடிந்து விட்டன. மற்றைய சபைகளின் காலமும் முடியவுள்ளது. அவற்றின் தேர்தலும் ஒத்தி வைக்கப்படும் நிலைமையே காணப்படுகின்றது. எல்லை நிர்ணய அறிக்கை மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் அது தொடர்பாக நடவடிக்கையெடுக்கப்படவில்லை. தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கத்திலேயே செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.’ என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்