இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றியுள்ள நிலையில், தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளது. 

இந்தக் கூட்டத்தின் பின் தன்னுடைய அரசியல் பயணம் தொடர்பிலான இறுதி முடிவை அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது.

சி.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைவராக கொண்ட தமிழ் மக்கள் பேரவையின் இந்தக் கூட்டத்தில், முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசியல் கூட்டணி தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை இந்தக் கூட்டத்தில் தெளிவுபடுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வடக்கு- கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடாது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

எனினும், அதனை நிராகரித்து இந்த செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்திருந்தனர். இதனால், கூட்டமைப்பு தலைமைக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழ் மக்களின் எதிர்காலத் தலைமைத்துவம் தொடர்பாக காத்திரமான முடிவை எடுப்பது குறித்து ஆராயப்படவுள்ளதாக பேரவை தெரிவித்துள்ளது.

“வடக்கு, கிழக்கில் தமிழர் அரசியல் நெருக்கடியான கட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், உடனடியாக மாற்றுத் தீர்வு ஒன்றை எட்ட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலேயே இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வழிகாட்டக் கூடிய சரியான தலைமைத்துவம் தேவைப்படுவதாகவும், ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் குரல் கொடுக்கக் கூடியவரான அந்த தலைமைத்துவத்தின் அவசியத்தை உணந்தே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கூட்டமைப்புக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்துள்ள நிலையில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஒரேகுடைக்குள் கொண்டு வரும் பாரிய முயற்சியாக இது இருக்கும்” என்றும் தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.