இலங்கை
Typography

தமிழர் தாயகத்தை துண்டாடும் வகையில் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை கண்டித்து முல்லைத்தீவில் பாரிய கண்டனப் பேரணியும், போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருனாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு மகாவலி அதிகார சபை காணி உத்தரவு பத்திரங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தே இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.

மகாவலி அதிகாரசபை முல்லைத்தீவில் தொடர்ச்சியாக தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து வருவதாக குற்றம் சாட்டிய ஏற்பாட்டுக் குழு, மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை, தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள் சிதைக்கப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டும், தமிழர் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள தென்னிலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி உத்தரவு பத்திரங்களை உடன் இரத்துச் செய்ய வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்போது, ‘தமிழனே விழித்திடு மகாவலியை எதிர்த்திடு’, ‘அரசே வடக்கு – கிழக்கை பிரிக்காதே’, ‘வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆயிரக்கணக்கானோர் பேரணியிலும் போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்