இலங்கை

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் கடற் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

வியட்நாமின் ஹெனோய் நகரில் நடைபெற்ற மூன்றாவது இந்து சமுத்திர மகாநாட்டின் ஆரம்ப உரையை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாற்பத்தெட்டு நாடுகளைச் சேர்ந்த 280 பிரதிநிதிகள் இம்முறை மகாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்து சமுத்திரம் என்பது “எதிர்காலத்தின் சமுத்திரம்” எனக் கூறிய பிரதமர், சமுத்திரத்தை அண்டிய நாடுகளின் நாகரிகம் ஊடாக உருவாகும் கலாசாரம், சர்வதேச தரம் மற்றும் நெறிமுறைகளுடன் பெறுமதி மிக்கதாக இந்து சமுத்திர வலயம் போதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் மாற்றங்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க வலய அமைப்புக்களால் முடியாது போயுள்ளது. அதனால், புதிய அமைப்பினை உருவாக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காக இம்முறை இம்மாநாடு பலம் பொருந்தியதாக அமையும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பியர்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் இந்து சமுத்திரத்தினூடான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. இந்த வர்த்தக நடவடிக்கைகளில் இன, மத கலாசார பிரச்சினைகள் காணப்படவில்லை. இந்து சமுத்திர பிராந்திய வர்த்தகர்கள் ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். அந்த கடந்தகால சம்பிரதாயங்களை மீண்டும் உருவாக்கி இந்து சமுத்திரத்தில் சுதந்திர கப்பற் பயணத்தை உறுதி செய்வதன் மூலம் சிறந்த வளமான எதிர்காலத்தை உருவாக்க சந்தர்ப்பம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.